2 கார்களில் கடத்தி சென்ற ரூ.23.88 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல் 5 பேர் கைது


2 கார்களில் கடத்தி சென்ற ரூ.23.88 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல் 5 பேர் கைது
x
தினத்தந்தி 23 Feb 2020 5:43 AM IST (Updated: 23 Feb 2020 5:43 AM IST)
t-max-icont-min-icon

2 கார்களில் கடத்தி சென்ற ரூ.23.88 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெலகாவி,

பெலகாவி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று இக்கேரி தாலுகா கமட்னரா கிராஸ் பகுதியில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக அடுத்தடுத்து வந்த 2 கார்களை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது 2 கார்களில் இருந்த 5 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், 2 கார்களிலும் தீவிர சோதனை நடத்தினார்கள். அப்போது 2 கார்களிலும் பண்டல், பண்டலாக பிளாஸ்டிக் கவர்களில் சுற்றப்பட்ட நிலையில் 500 ரூபாய் நோட்டு கட்டுகள் இருந்தன.

இதுகுறித்து கார்களில் இருந்த 5 பேரிடமும் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். மேலும் ேபாலீசார், கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளை பிரித்து பார்த்தனர். அப்போது, அந்த கட்டில் முதல் நோட்டு மற்றும் கடைசி நோட்டை தவிர இடையே இருந்த நோட்டுகள் அனைத்தும் வெள்ளை காகிதங்களாக இருந்தன.

கார்களில் இருந்த 12 கட்டுகளிலும் இதே போன்று வெள்ளை காகிதங்கள் தான் இருந்தன. இதனால் அந்த நபர்கள் கள்ளநோட்டுகளை கார்களில் கடத்தி வந்தது தெரியவந்தது. அந்த கள்ளநோட்டுகளின் உண்மையான மதிப்பு ரூ.23.88 லட்சம் ஆகும்.

இதையடுத்து போலீசார், அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் மராட்டிய மாநிலம் கோலாப்பூரை சேர்ந்த அமர் சங்கர் அம்பேத்கர் (வயது 28), நிப்பானியை சேர்ந்த வசந்த் பட்டீல் (31), ராஜேஷ் மாருதி (48), பாபுராவ் பட்டீல் (42), சிக்கோடியை சேர்ந்த காலோலகம் (50) என்பது தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து ரூ.23.88 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள், 2 கார்கள், 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து சங்கேஸ்வரா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் கள்ளநோட்டை எங்கிருந்து எங்கு கடத்தி சென்றனர் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story