டாக்டர் பயல் தற்கொலை வழக்கில் சிக்கிய 3 பெண் டாக்டர்கள் மேற்படிப்பை தொடர அனுமதி மறுப்பு - ஐகோர்ட்டு உத்தரவு


டாக்டர் பயல் தற்கொலை வழக்கில் சிக்கிய 3 பெண் டாக்டர்கள் மேற்படிப்பை தொடர அனுமதி மறுப்பு - ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 23 Feb 2020 1:09 AM GMT (Updated: 23 Feb 2020 1:09 AM GMT)

டாக்டர் பயல் தற்கொலை வழக்கில் சிக்கியுள்ள 3 பெண் டாக்டர்கள் நாயர் ஆஸ்பத்திரியில் மேற்படிப்பை தொடர மும்பை ஐகோர்ட்டு அனுமதி மறுத்துவிட்டது.

மும்பை,

மும்பை நாயர் ஆஸ்பத்திரி மருத்துவ கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பு படித்து வந்தவர் பெண் டாக்டர் பயல். இவர் கடந்த ஆண்டு மே மாதம் மருத்துவ கல்லூரி விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாதி ரீதியாக துன்புறுத்தி பயலை தற்கொலைக்கு தூண்டியதாக பெண் டாக்டர்களான மேற்படிப்பு சீனியர் மாணவிகள் ஹேமா அகுஜா, பக்தி, அங்கிதா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 3 பேருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் மும்பை ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

அப்போது 3 பேரும் கோர்ட்டு அனுமதியின்றி மும்பையைவிட்டு வெளியேற கூடாது, நாயர் ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் நுழைய கூடாது போன்ற கடும் நிபந்தனைகளை விதித்தது.

இந்தநிலையில் மருத்துவ மேற்படிப்பை தொடரும் வகையில், நாயர் ஆஸ்பத்திரிக்குள் செல்ல தங்களை அனுமதிக்குமாறு வழக்கில் சிக்கிய 3 பேரும் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி சாதனா ஜாதவ் விசாரித்தார். முன்னதாக இந்த மனு மீதான விசாரணையின் போது, டாக்டர் பயலை தற்கொலைக்கு தூண்டியதாக 3 பேரையும் ஆஸ்பத்திரிக்குள் அனுமதிக்க ஆஸ்பத்திரி நிர்வாகம் மற்றும் அரசு தரப்பு வக்கீல் கடும் எதிா்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து மனுவை விசாரித்த நீதிபதி, சம்பந்தப்பட்ட பெண் டாக்டர்களான ஹேமா அகுஜா, பக்தி, அங்கிதா ஆகியோர் நாயர் ஆஸ்பத்திரியில் மருத்துவ மேற்படிப்பை தொடர அனுமதிக்க மறுத்து உத்தரவிட்டதுடன், அவர்களின் மனுவை தள்ளுபடி செய்தார்.


Next Story