குழந்தைகளுக்கு தாய், தந்தை இல்லை என்ற நிலையை போக்கும் சூழலை அரசு உருவாக்கும் எடப்பாடி பழனிசாமி பேச்சு
குழந்தைகளுக்கு தாய், தந்தை இல்லை என்ற நிலையை போக்கக்கூடிய சூழலை அரசு உருவாக்கும்.
தூத்துக்குடி,
குழந்தைகளுக்கு தாய், தந்தை இல்லை என்ற நிலையை போக்கக்கூடிய சூழலை அரசு உருவாக்கும் என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
நலத்திட்ட உதவிகள்
திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலாபுரம் புனிதசூசை அறநிலைய இல்லத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மாணவ–மாணவிகளுக்கு சைக்கிள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
தாய், தந்தை இல்லை
புனித சூசை அறநிலைய இல்லத்தில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படவில்லை என்று தெரிவித்தார்கள். பிளஸ்–1 மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது. வருகிற ஜூன் மாதம் புனித சூசை அறநிலையம் நடத்துகின்ற பள்ளியில் பிளஸ்–1 படிக்கும் மாணவர்களுக்கு அரசின் சார்பில் லேப்டாப் வழங்கப்படும். அதுமட்டுமின்றி, டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஏ.சி. சண்முகம், இந்த பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு உணவு வழங்குவதற்காக 2 லாரி லோடு அரிசியை இலவசமாக வழங்குகிறார். இங்கே படிக்கின்ற குழந்தைகளுக்கு தாய், தந்தை இல்லை என்ற நிலையை போக்கக்கூடிய சூழ்நிலையை எங்களுடைய அரசு உருவாக்கும்.
இந்த இல்லத்தை துவக்கி 166 ஆண்டுகள் ஆகிறது என்று குறிப்பிட்டார்கள். முன்னாள் பாரத பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு, பெருந்தலைவர் காமராஜர், எம்.ஜி.ஆர். ஆகியோரும் இந்த இல்லத்துக்கு வந்து உள்ளனர். அந்த இடத்தில் நானும் வந்து உங்களோடு கலந்துரையாடியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த இல்லம் மேலும் வளர்ந்து சேவை புரிய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, சி.விஜயபாஸ்கர், டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், எம்.எல்.ஏ.க்கள் சண்முகநாதன், சின்னப்பன், தலைமை செயலாளர் சண்முகம், டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஏ.சி. சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story