லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதல் பிளஸ்-2 மாணவர் பலி மற்றொருவர் படுகாயம்


லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதல் பிளஸ்-2 மாணவர் பலி மற்றொருவர் படுகாயம்
x
தினத்தந்தி 24 Feb 2020 4:00 AM IST (Updated: 23 Feb 2020 10:42 PM IST)
t-max-icont-min-icon

செங்குன்றம் அருகே சாலையோரம் நின்ற டிரெய்லர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் பிளஸ்-2 மாணவர் பலியானார். மற்றொரு மாணவர் படுகாயம் அடைந்தார்.

செங்குன்றம்,

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தை அடுத்த திருக்கண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேந்தர்(வயது 17). இவர், செங்குன்றத்தை அடுத்த எம்.ஏ. நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

செங்குன்றத்தை அடுத்த சோழவரம் சோத்துபெரும்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் தனுஷ் பாலாஜி(17). இவரும் அதே பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

நேற்று காலை தனியார் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட விட்டமின் சி குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் செங்குன்றத்தை அடுத்த அம்பேத்கர் நகரில் இருந்து அலமாதி வரை நடந்தது. இதில் நண்பர்களான சுரேந்தர், தனுஷ் பாலாஜி இருவரும் கலந்து கொண்டனர்.

பின்னர் இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் அலமாதியில் இருந்து செங்குன்றத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர். எடப்பாளையம் அருகே செங்குன்றம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் வந்தபோது அங்கு சாலையோரம் நின்றிருந்த டிரெய்லர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த சுரேந்தர், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். தனுஷ் பாலாஜி பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினார்.

அவரை மீட்டு செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலிங்கம் மற்றும் போலீசார் பலியான சுரேந்தர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து நடந்ததும் டிரைலர் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைலர் லாரி டிரைவரை தேடி வருகிறார்கள். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story