மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர், இயக்குனர் நியமிக்க வேண்டும்


மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர், இயக்குனர் நியமிக்க வேண்டும்
x
தினத்தந்தி 24 Feb 2020 5:00 AM IST (Updated: 24 Feb 2020 2:46 AM IST)
t-max-icont-min-icon

அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உடற்கல்வி ஆசிரியர் மற்றும் இயக்குனர்களை நியமிக்க வேண்டும் என்று திருச்சியில் நடந்த சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி,

தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்-உடற்கல்வி இயக்குனர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று திருச்சியில் மாநில தலைவர் சங்கர பெருமாள் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

அனைத்து உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் மத்திய அரசு பட்டதாரி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும். பள்ளி கல்வித்துறையின் சார்பில் நடத்தப்படும் தடகளம், புதிய விளையாட்டு போட்டி மற்றும் பழைய விளையாட்டு போட்டிகளை உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் மூலமாக மட்டுமே நடத்த வேண்டும். இந்த விளையாட்டு போட்டிகளில் விளையாட்டு கழகங்களில் உள்ளவர்களை நடுவர்களாக நியமிக்க கூடாது.

பணியிட நியமனம்

முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் காலியாக உள்ள மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும். நடுநிலைப்பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களது எண்ணிக்கைக்கு ஏற்ப உடற்கல்வி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர்கள் பணியிடங்களை உடனடியாக உருவாக்கி நியமனம் செய்யவேண்டும்.

மேலும் மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் அவர்களது விளையாட்டு திறனை மேம்படுத்த விளையாட்டு உபகரணங்களையும் வாங்கி கொடுக்கவேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா உடற்கல்வி பாட புத்தகங்கள் வழங்கப் படவேண்டும். பணியில் இருக்கும் உடற்கல்வி ஆசிரியர், இயக்குனர்கள் தங்களது தகுதியை வளர்த்துக்கொள்ள ஏதுவாக கோடைகால பயிற்சி வகுப்பு நடத்திட பள்ளி கல்வி துறையும், உயர்கல்வி துறையும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்கண்டவை உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிர்வாகிகள் தேர்வு

கூட்டத்தில் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. சங்கர பெருமாள் மாநில தலைவராக மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநில செயலாளராக ரத்தினகுமார், பொருளாளராக சதீஷ், செயல்தலைவராக செல்வகுமார், தலைமை நிலைய செயலாளராக லிங்கேஷ் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Next Story