கூடலூர் அருகே, முல்லைப்பெரியாற்றில் தண்ணீர் திருடும் கும்பல்


கூடலூர் அருகே, முல்லைப்பெரியாற்றில் தண்ணீர் திருடும் கும்பல்
x
தினத்தந்தி 24 Feb 2020 3:45 AM IST (Updated: 24 Feb 2020 3:37 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே முல்லைப்பெரியாற்றில் குடிநீருக்காக திறக்கப்படும் தண்ணீரை வாய்க்கால் வழியாக கும்பல் திருடி வருகிறது.

கூடலூர்,

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. இந்த அணையின் மொத்த உயரம் 152 அடி. இதில் 142 அடி வரை தண்ணீர் தேக்கிக்கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. இந்த அணை தண்ணீர் மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் கோடை, சம்பா என இருபோக நெல் சாகுபடி செய்யப்பட்டு வந்தது.

இந்தநிலையில் தற்போது முதல் போக நெல் அறுவடை பணிகள் முடிவடைந்துவிட்டது. மேலும் கூடலூர், கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் 2-ம் போக நெல் சாகுபடிக்கு நெல் நாற்றங்கால் அமைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர். இந்த ஆண்டு முல்லைப்பெரியாறு அணை பகுதியில் போதிய அளவு மழைப்பொழிவு இல்லாததால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால் 2-ம் போக விவசாயத்தை கைவிடுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பல்வேறு இடங்களில் விவசாயிகள் 2-ம் போக நெல் சாகுபடி செய்யவில்லை. தரிசு நிலங்களாகவே விட்டுள்ளனர்.

தற்போது முல்லைப்பெரியாறு அணையில் இருந்து குடிநீருக்காக மட்டும் இரைச்சல் பாலம் வழியாக வினாடிக்கு 100 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கூடலூர் அருகே உள்ள முல்லைப்பெரியாற்றில் இருந்து குடிநீருக்காக திறக்கப்பட்டுள்ள தண்ணீரை குருவனூற்று, காஞ்சிமரத்துறை, அய்யர்வாய்க்கால், ஐந்துமடை, சிறுகுளம், கப்பாமடை ஆகிய பகுதிகளுக்கு சிலர் திருட்டுத்தனமாக இரவு நேரங்களில் வாய்க்கால் வழியாக கொண்டு செல்வதாக புகார் எழுந்துள்ளது.

மேலும் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே குடிநீருக்காக திறந்துவிடப்படும் தண்ணீரை திருடும் கும்பலை கண்டறிந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறையினர் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Next Story