திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளை முட்டியதில் பிளஸ்-2 மாணவர் பலி - 11 பேர் காயம்


திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளை முட்டியதில் பிளஸ்-2 மாணவர் பலி - 11 பேர் காயம்
x
தினத்தந்தி 23 Feb 2020 11:15 PM GMT (Updated: 23 Feb 2020 10:07 PM GMT)

திண்டுக்கல் அருகே நல்லமநாயக்கன்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளை முட்டியதில் பிளஸ்-2 மாணவர் பலியானார். மேலும் 11 பேர் காயமடைந்தனர்.

குள்ளனம்பட்டி,

திண்டுக்கல் அருகே நல்லமநாயக்கன்பட்டி புனித வனத்து அந்தோனியார் திருவிழாவையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. இதனை, திண்டுக்கல் ஆர்.டி.ஓ. உஷா கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் தலைமையிலான குழுவினர் காளைகளை பரிசோதனை செய்தனர். மேலும் மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. முதலில் ஆலய காளை அவிழ்த்து விடப்பட்டது. இதனை யாரும் பிடிக்கவில்லை. பின்னர் திண்டுக்கல், மதுரை, திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 497 காளைகள் சீறிப்பாய்ந்தன. காளைகளை அடக்க 267 பேர் பதிவு செய்திருந்தனர். அவர்கள் சுழற்சி முறையில் காளைகளை அடக்க அனுமதிக்கப்பட்டனர்.

களத்தில் சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக அடக்க முயன்றனர். இதில் சில காளைகள் வீரர்களின் பிடிக்கு அடங்கியது. சில காளைகள் வீரர் களை அருகில் கூட நெருங்க விடாமல் ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்தன. மேலும் சில வீரர்களைமுட்டி பந்தாடின.

காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், பீரோ, சைக்கிள், வெள்ளிக்காசு, அண்டா உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் சிறந்த மாடுபிடி வீரராக திண்டுக்கல் வேடபட்டியை சேர்ந்த தாமஸ் (வயது 21) தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.

ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் 8 பேர், பார்வையாளர்கள் 3 பேர், மாட்டின் உரிமையாளர் ஒருவர் என மொத்தம் 12 பேர் காயம் அடைந்தனர். இவர்களுக்கு அங்கு ஏற்கனவே தயார் நிலையில் இருந்த டாக்டர் சிவசுப்பிரமணியன் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

இதில் பலத்த காயம் அடைந்த மாடுபிடி வீரர்கள் பஞ்சம்பட்டியை சேர்ந்த பூமிராஜ் (22), ஒய்.எம்.ஆர்.பட்டியை சேர்ந்த கோகுலசேகர் (36), கவராயன்பட்டியை சேர்ந்த சூர்யா (20), தோட்டனூத்தை சேர்ந்த சூரியபிரகாஷ் (27), நத்தம் வேலம்பட்டி வெள்ளக்குட்டை கிராமத்தை சேர்ந்த நாகராஜ் (18) ஆகியோர் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் வழியிலேயே நாகராஜ் பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாடுமுட்டியதில் பலியான நாகராஜ், நத்தத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவர், ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டு காளைகளை அடக்க நினைத்தார். இதற்காக, தனது வயதை 21 என்று கூறி பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஜல்லிக்கட்டில் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் வினோத், வீரபாண்டி, தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வம் ஆகியோர் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த ஜல்லிக்கட்டில் திண்டுக்கல் கிழக்கு தாசில்தார் மீனாதேவி, வருவாய் ஆய்வாளர் ரஞ்சித்குமார், கிராம நிர்வாக அலுவலர் முகமது ஜக்கிரியா ஆகியோர் கலந்துகொண்டு பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊர் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Next Story