மாவட்ட செய்திகள்

பெலகாவியில் ராணுவ வீரர் கொலை வழக்கில் கள்ளக்காதலனுடன், மனைவி கைது - கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்ததால் தீர்த்துக்கட்டியது அம்பலம் + "||" + Army soldier killed in Belagavi Along with counterfeiters, wife arrested

பெலகாவியில் ராணுவ வீரர் கொலை வழக்கில் கள்ளக்காதலனுடன், மனைவி கைது - கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்ததால் தீர்த்துக்கட்டியது அம்பலம்

பெலகாவியில் ராணுவ வீரர் கொலை வழக்கில் கள்ளக்காதலனுடன், மனைவி கைது - கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்ததால் தீர்த்துக்கட்டியது அம்பலம்
பெலகாவியில் ராணுவ வீரர் கொலை வழக்கில் கள்ளக்காதலனுடன், மனைவி கைது செய்யப்பட்டார். கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்ததால் தீர்த்துக்கட்டியது அம்பலமாகி உள்ளது.
பெங்களூரு,

பெலகாவி மாவட்டம் மாரிகால் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கொன்னிகாலா பகுதியில் வசித்து வந்தவர் தீபக் பட்டனத்தார் (வயது 32). இவரது மனைவி அஞ்சலி. இந்த தம்பதிக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. ராணுவ வீரரான தீபக், கடந்த 14 ஆண்டுக்கு முன்பு ராணுவத்தில் சேர்ந்து ஜம்மு-காஷ்மீரில் பணியாற்றி வந்தார். ஆண்டுக்கு 2 முறை மட்டும் விடுமுறையில் ஊருக்கு வருவதை அவர் வழக்கமாக வைத்திருந்தார். இன்னும் சில மாதங்களில் பணியில் இருந்து தீபக் ஓய்வு பெற உள்ளதால், போலீஸ்துறையில் சேர முடிவு செய்தார். இதற்காக போலீசில் சேருவதற்காக தேர்வையும் அவர் எழுதி இருந்தார்.


இந்த நிலையில், கடந்த 4-ந் தேதி தனது கணவர் தீபக்கை காணவில்லை என்று கூறி மாரிகால் போலீஸ் நிலையத்தில் அஞ்சலி புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தீபக்கை தேடிவந்தனர். ஆனால் அவரை பற்றிய எந்த தகவலும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இதனால் தனது கணவரை கண்டுபிடிப்பதில் போலீசார் அலட்சியமாக செயல்படுவதாக கூறி மாரிகால் போலீஸ் நிலையம் முன்பு அஞ்சலி மற்றும் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். இதையடுத்து, தீபக்கை கண்டுபிடிக்க போலீசார் தீவிரம் காட்டினார்கள்.

மேலும் பெலகாவி மாவட்டம் கோகாக் தாலுகாவில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு நண்பர்களுடன் தீபக் சென்றது பற்றி போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, தீபக்கின் நண்பர்கள் சிலரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது தீபக்குடன் கார் டிரைவரான பிரசாந்தும் சென்றதும் தெரியவந்தது. உடனே சந்தேகத்தின் பேரில் பிரசாந்தை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் சொன்னார். இதையடுத்து, பிரசாந்திடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினார்கள்.

அப்போது தீபக்கின் மனைவி அஞ்சலியுடன், பிரசாந்திற்கு கள்ளத்தொடர்பு இருந்ததும், இந்த கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்ததால் தீபக்கை 2 பேரும் சேர்ந்து தீர்த்து கட்டியதும், கோகாக் அருகே உள்ள வனப்பகுதியில் உடலை வீசியதும் தெரியவந்துள்ளது. அதைத்தொடர்ந்து, அஞ்சலி, கள்ளக்காதலன் பிரசாந்தை மாரிகால் போலீசார் கைது செய்து விசாரித்ததில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதாவது ராணுவ வீரரான தீபக், இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெற இருப்பதால் கொன்னிகாலா கிராமத்தில் புதிதாக நிலம் வாங்கி வீடு கட்டியுள்ளார். மேலும் மனைவி, குழந்தையுடன் வெளியே செல்வதற்காக தீபக் ஒரு கார் வாங்கியுள்ளார். அந்த காருக்கு டிரைவராக அதே கிராமத்தை சேர்ந்த பிரசாந்தை அவர் வேலைக்கு சேர்த்துள்ளார். இந்த நிலையில், கார் டிரைவரான பிரசாந்துடன் அஞ்சலிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கணவர் ஜம்மு-காஷ்மீரில் பணியாற்றுவதால் பிரசாந்துடன், அஞ்சலி காரில் சுற்றி திரிந்துள்ளார். இவர்களது கள்ளக்காதல் பற்றி கடந்த மாதம் (ஜனவரி) விடுமுறையில் ஊருக்கு வந்த தீபக்கிற்கு தெரியவந்தது. உடனே அவர் தனது மனைவியை கண்டித்துள்ளார்.

இதனால் கள்ளத்தொடர்புக்கு இடையூறாக உள்ள தீபக்கை கொலை செய்ய அஞ்சலியும், பிரசாந்தும் திட்டமிட்டுள்ளனர். பின்னர் ஜனவரி 28-ந் தேதி தனது கணவரை வலுக்கட்டாயப்படுத்தி கோகாக் தாலுகாவில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு அஞ்சலி அழைத்து சென்றுள்ளார். அவர்களுடன் காரில் பிரசாந்தும் சென்றுள்ளார். அங்கு வைத்து நீர்வீழ்ச்சியில் இருந்து தீபக்கை கீழே தள்ளி கொலை செய்ய 2 பேரும் திட்டமிட்டுள்ளனர். அதே நேரத்தில் தீபக்கை கொலை செய்ய தனது நண்பர்கள் 2 பேரையும் கோகாக் வரும்படி பிரசாந்த் கூறியுள்ளார். அதன்படி அவர்களுக்கும் அங்கு வந்துள்ளனர்.

பின்னர் கோகாக்கில் வைத்து தீபக், பிரசாந்த், அவரது நண்பர்கள் மதுஅருந்தி உள்ளனர். அதன்பிறகு, தீபக்கை நீர்வீழ்ச்சியில் இருந்து கீழே தள்ளி கொல்ல முயன்றுள்ளனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதனால் தீபக்கை கத்தியால் குத்தி பிரசாந்த், அவரது நண்பர்கள் கொலை செய்திருக்கிறார்கள். அவரது உடலை அங்குள்ள வனப்பகுதியில் வீசியது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அஞ்சலி, பிரசாந்த்தை வனப்பகுதிக்கு போலீசார் அழைத்து சென்று, தீபக் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவரது உடலை வனவிலங்குகள் தின்று இருந்தது.

கைதான அஞ்சலி, பிரசாந்த் மீது மாரிகால் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த கொலையில் தொடர்புடைய பிரசாந்தின் நண்பர்களை போலீசார் தேடிவருகிறார்கள். இந்த கொலை சம்பவம் பெலகாவியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.