ஜெயலலிதா பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் அமைச்சர் தங்கமணி பேச்சு


ஜெயலலிதா பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் அமைச்சர் தங்கமணி பேச்சு
x
தினத்தந்தி 24 Feb 2020 12:00 AM GMT (Updated: 23 Feb 2020 10:55 PM GMT)

ஜெயலலிதா பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என நாமக்கல்லில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் தங்கமணி பேசினார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் பி.ஆர்.சுந்தரம் தலைமை தாங்கினார். சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா, எம்.எல்.ஏ.க்கள் சந்திரசேகரன், பொன்.சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் 3 ஒன்றியக்குழு தலைவர் பதவியையும், 4 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவியையும் நாம் இழந்து உள்ளோம்.

குறிப்பாக 5 ஒன்றிய செயலாளர்கள் தோல்வியை சந்தித்து உள்ளனர். அதில் 4 ஒன்றியங்களை நாம் கைப்பற்றி உள்ளோம். இதில் இருந்து உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் வருகிற பேரூராட்சி மற்றும் நகராட்சி தேர்தல்களில் இதுபோன்ற தவறுகள் நடக்க கூடாது.

கொண்டாட வேண்டும்

இன்று (திங்கட்கிழமை) முதல் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒரு வார காலத்திற்கு கொண்டாட வேண்டும். அனைத்து கிளை கழகங்களிலும் அ.தி.மு.க. கொடி ஏற்றி, அன்னதானம் வழங்கி நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். இதேபோல் கோவில்களில் சிறப்பு பூஜை செய்ய வேண்டும். இனிவரும் காலங்களில் ஊழியர் கூட்டங்களுக்கு பொதுமக்கள் யாரையும் அழைத்து வர வேண்டாம்.

ஆனால் கண்டிப்பாக கிளை கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கூட்டத்துக்கு வர வேண்டும். அவ்வாறு வருகை தராமல், பொறுப்பற்ற முறையில் செயல்படும் நிர்வாகிகளின் பட்டியலை தலைமைக்கு அனுப்பி அவர்களை மாற்ற பரிந்துரை செய்வேன். எதிர்க்கட்சிகளால் நமது ஆட்சியை குறை கூற முடியவில்லை. எனவே பா.ஜனதாவுக்கு அடிமையாக இருக்கிறோம் என்கிறார்கள். பா.ஜனதாவுடன் இணக்கமாக செயல்பட்டு பல்வேறு நிதியை பெற்று உள்ளோம் என்பதை தெரிவித்து கொள்கிறேன். .

மருத்துவ கல்லூரி

வருகிற மார்ச் மாதம் 5-ந் தேதி நாமக்கல்லில் மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். நாம் ஏற்கனவே எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை எப்படி வெற்றிகரமாக நடத்தினோமோ அதேபோல் இந்த விழாவையும் சிறப்பாக நடத்த வேண்டும். மருத்துவ கல்லூரி அமைய உள்ள 11 மாவட்டங்களில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியாக மாற்ற வேண்டும். இந்த விழாவில் 1 லட்சம் பேரை பங்கேற்க செய்ய வேண்டும். வருகிற சட்டமன்ற தேர்தலிலும் 6 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் டி.எல்.எஸ். காளியப்பன், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சேவல் ராஜூ, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சாரதா, ஜெயலலிதா பேரவை செயலாளர் சந்திரசேகர், ஆவின் தலைவர் ரஜேந்திரன், மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் சுரே‌‌ஷ்குமார் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story