குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சேலத்தில் கருப்புக்கொடி ஏந்தி முஸ்லிம் பெண்கள் போராட்டம்


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சேலத்தில் கருப்புக்கொடி ஏந்தி முஸ்லிம் பெண்கள் போராட்டம்
x
தினத்தந்தி 24 Feb 2020 5:30 AM IST (Updated: 24 Feb 2020 4:32 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நேற்று சேலத்தில் முஸ்லிம் பெண்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்,

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் நாடு முழுவதும் முஸ்லிம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக சேலம் கோட்டை பகுதியில் ஏராளமான முஸ்லிம் பெண்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களது போராட்டம் நேற்று 7-வது நாளாக நீடித்தது. இதில், முஸ்லிம் பெண்கள் தங்களது குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும், இதுபற்றி தமிழக சட்ட சபையை உடனடியாக கூட்டி சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி கோ‌‌ஷங்களை எழுப்பினர். மேலும், குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய வார்த்தைகளை முஸ்லிம் பெண்களின் குழந்தைகள் தங்களது உடலில் வரைந்து எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

வீடுகளில் கருப்புக்கொடி

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முஸ்லிம் பெண்கள் கூறுகையில், சேலத்தில் 7-வது நாளாக நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால் இதுவரை அரசு எங்களை அழைத்து பேசவில்லை. இதனால் இன்று (நேற்று) கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மேலும் வரும் நாட்களில் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளோம். அதாவது, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வீடுகளில் கருப்புக்கொடி ஏந்தி எதிர்ப்புகளை தெரிவிக்க உள்ளோம். எனவே, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டசபையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Next Story