இரவு நேரத்தில் பியூட்டி பார்லர் நடத்த தடை போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு


இரவு நேரத்தில் பியூட்டி பார்லர் நடத்த தடை போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
x
தினத்தந்தி 23 Feb 2020 11:50 PM GMT (Updated: 23 Feb 2020 11:50 PM GMT)

இரவு நேரத்தில் பியூட்டி பார்லர் நடத்த தடை விதித்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

அரியாங்குப்பம்,

புதுச்சேரி தெற்கு போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பியூட்டி பார்லர் (அழகு நிலையம்) உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் அரியாங்குப்பம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது.

தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் தலைமை தாங்கினார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜன், இளங்கோ, வீரபத்திரசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், பாகூர் உள்ளிட்ட பகுதிகளில் பியூட்டி பார்லர் நடத்திவரும் உரிமையாளர்களும் அதன் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் பேசியதாவது;-

கண்காணிப்பு கேமரா

பியூட்டி பார்லர் வைத்திருக்கும் அனைவரும் சம்பந்தப்பட்ட துறையிடம் கட்டாயமாக உரிமம் எடுக்க வேண்டும்.

குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் விதமாக பியூட்டி பார்லரில் முகப்பில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். பியூட்டி பார்லருக்கு வந்து செல்பவர்களின் விவரங்களை சேகரித்து வைக்க வேண்டும்.

இரவு நேரத்தில் கட்டாயமாக பியூட்டி பார்லர் நடத்தக் கூடாது. சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாட்டம் இருந்தாலும், பியூட்டி பார்லருக்கு வந்து சென்றாலும் அருகிலுள்ள போலீசாருக்கு தகவல் தர வேண்டும். பார்லரில் முறைகேடாக யாராவது செயல்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாமூல் கேட்டு யாரேனும் மிரட்டினாலும் போலீஸ் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இந்த சமயத்தில் அவசர போலீஸ் எண்ணிற்கு உடனடியாக தொடர்பு கொண்டு பேச வேண்டும்.

சீல் வைக்கப்படும்

பியூட்டி பார்லரில் பணி புரிவோரின் விவரங்களை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும். உரிமம் இல்லாமல் செயல்படும் பியூட்டி பார்லர்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் போலீஸ் அதிகாரிகளும் சேர்ந்து சீல் வைக்கும் நிலைமை ஏற்படும். அதனை தவிர்க்க வேண்டிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story