சரத்பவார், அஜித்பவாருடன் உத்தவ் தாக்கரே ஆலோசனை பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மராட்டிய சட்டசபை இன்று கூடுகிறது 6-ந் தேதி பட்ஜெட் தாக்கல்


சரத்பவார், அஜித்பவாருடன் உத்தவ் தாக்கரே ஆலோசனை பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மராட்டிய சட்டசபை இன்று கூடுகிறது 6-ந் தேதி பட்ஜெட் தாக்கல்
x
தினத்தந்தி 24 Feb 2020 5:38 AM IST (Updated: 24 Feb 2020 5:38 AM IST)
t-max-icont-min-icon

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மராட்டிய சட்டசபை இன்று கூடுகிறது. மார்ச் 6-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் சரத்பவார், அஜித்பவாருடன் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தினார்.

மும்பை,

மராட்டிய சட்ட சபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (திங்கட் கிழமை) தொடங்குகிறது. சிவசேனா தலைமையிலான மகா விகாஷ் அகாடி கூட்டணி அரசின் முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் இதுவாகும். அடுத்த மாதம் (மார்ச்) 6-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

பட்ஜெட் தயாரிப்பில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மற்றும் துணை முதல்-மந்திரியும், நிதி மந்திரியுமான அஜித் பவார் ஆகியோர் தீவிரம் காட்டி வருகின்றனர். பட்ஜெட் தயாரிப்பு குறித்து நேற்று அஜித் பவார் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருடன் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை முதல்-மந்திரியின் அதிகாரப்பூர்வ இல்லமான ‘வர்ஷா’வில் நடந்தது.

பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் 20-ந் தேதி வரை 4 வாரங்கள் நடைபெறுகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பிரதான எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப திட்டமிட்டு உள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவை தொடர்பாக ஆளும் சிவசேனா கூட்டணி கட்சிகளிடையே முரண்பாடு இருந்து வரும் நிலையில், இந்த பிரச்சினைகளில் மராட்டிய அரசின் நிலைப்பாடு குறித்து ஆளும் கட்சிகளை திணறடிக்க பாரதீய ஜனதா திட்டமிட்டு உள்ளது.

விவசாய கடன் தள்ளுபடி, பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் குற்ற சம்பவங்கள் தொடர்பாகவும் பாரதீய ஜனதா புயலை கிளப்பும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இந்த நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குவதையொட்டி முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று அனைத்து கட்சி தலைவர்களுக்கு தேநீர் விருந்து கொடுத்தார். இந்த தேநீர் விருந்தை பாரதீய ஜனதா தலைவர்கள் புறக்கணித்தனர். இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் அளித்த பேட்டியில் கூறிய தாவது:-

இது ஒரு திக்கு திசையற்ற அரசாங்கமாகும். மாநில அரசின் தேநீர் விருந்தில் கலந்து கொள்ளும் மனநிலையில் நாங்கள் இல்லை.

தேநீர் விருந்தில் கலந்து கொள்ள எதிர்க்கட்சிக்கு அழைப்பு விடுத்தது சிறந்த தகவல் தொடர்புக்கானது. ஆனால் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் முதலில் தங்கள் தகவல் தொடர்புகளை மேம்படுத்த வேண்டும். அவர்கள் ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. இதன் மூலம் அவர்கள் கொடுத்தது அனைத்தும் பொய்யான வாக்குறுதிகள் என்பது மிக தெளிவாக தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story