கபடி வீரரை கொன்ற 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது


கபடி வீரரை கொன்ற 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 24 Feb 2020 4:00 AM IST (Updated: 24 Feb 2020 5:48 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் கபடி வீரரை கொன்ற 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

கோவை,

கோவை அம்மன்குளம் நியூ ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 21), மகேஷ்வரன் (22). கபடி வீரர்களான இவர்கள் இருவரும் கடந்த மாதம் 16-ந் தேதி அந்த பகுதியில் உள்ள சக்திமாரியம்மன் கோவில் அருகே நடந்து சென்றபோது, இவர்களை 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து கத்தியால் குத்தியது. இதில் நவீன்குமார் படுகாயம் அடைந்து இறந்தார். காயம் அடைந்த மகேஷ்வரன் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உயிர் பிழைத்தார்.

பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெற்ற கபடி விளையாட்டு போட்டியில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்தது விசாரணையில் தெரியவந்தது.

இந்த கொலை தொடர்பாக அம்மன்குளம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (23), அவருடைய தம்பி கண்ணன் (21), பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தை சேர்ந்த ஹரிகரன்(21) மற்றும் 17 வயது சிறுவன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் சிறுவன் மட்டும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார். மற்றவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் விஜயகுமார், கண்ணன், ஹரிகரன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோவை நகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ராமநாதபுரம் இன்ஸ்பெக்டர் முருகேசன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 பேரிடமும் இதற்கான உத்தரவு நகலை வழங்கினார்.

Next Story