தியாகதுருகத்தில், உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகளை ஆணையர் பழனிசாமி ஆய்வு


தியாகதுருகத்தில், உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகளை ஆணையர் பழனிசாமி ஆய்வு
x
தினத்தந்தி 24 Feb 2020 4:00 AM IST (Updated: 24 Feb 2020 5:48 AM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகத்தில் உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகளை மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.

கண்டாச்சிமங்கலம்,

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடந்தது. ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் என 4 பதவிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. இந்த நிலையில் தேர்தல் நடத்தாத விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் (மார்ச்) கடைசி வாரம் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. இந்த தேர்தலுடன் தமிழகத்தில் உள்ள 529 பேரூராட்சிகள், 125 நகராட்சிகளுக்கும் தேர்தல் நடத்தவும் மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இதையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தற்போது தீவிரமாக செய்து வருகிறது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பேரூராட்சி மன்ற அலுவலகத்திற்கு மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி நேற்று முன்தினம் வருகை தந்தார். பின்னர் அங்கு நடைபெற்று வரும் உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம், உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் படிவங்கள், தேர்தல் நடத்தும் அலுவலர் கையேடு, வாக்குச்சாவடி அலுவலர் கையேடு, வேட்பாளர்களின் வேட்புமனு படிவம் ஆகியவை தயார் நிலையில் உள்ளதா ?, மேலும் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் எத்தனை வாக்குச்சாவடிகள் உள்ளன ? என்பது குறித்த விவரங்களை கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சேகர், ஊராட்சிகள் உதவி இயக்குனர் ரெத்தினமாலா, வட்டார வளர்ச்சி அலுவலர் (தேர்தல்) கணேசன், வடக்கனந்தல் செயல் அலுவலர் ஆறுமுகம், இளநிலை உதவியாளர் கொளஞ்சியப்பன், கணினி உதவியாளர் முத்து உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story