ரூ.200 கோடியில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள்; கிரண்பெடி ஆய்வு


ரூ.200 கோடியில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள்; கிரண்பெடி ஆய்வு
x
தினத்தந்தி 24 Feb 2020 5:56 AM IST (Updated: 24 Feb 2020 5:56 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் ரூ.200 கோடியில் நடைபெறும் சுற்றுலா மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டு கவர்னர் கிரண்பெடி ஆய்வு மேற்கொண்டார்.

புதுச்சேரி,

புதுச்சேரியில் இருக்கும் போது கவர்னர் கிரண்பெடி வார இறுதி நாட்களில் வளர்ச்சிப்பணிகளை ஆய்வு செய்வது வழக்கம். இ்ந்த ஆய்வின் போது சுகாதாரம், சுற்றுலா மற்றும் நிலத்தடி நீர் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

கவர்னர் மாளிகையில் இருந்து நேற்று புறப்பட்ட கவர்னர் கிரண்பெடி கடற்கரை சாலையில் உள்ள பழைய சாராய ஆலைக்கு சென்று அங்கு நடைபெறும் கலாசார மைய கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார்.

பின்னர் பழைய துறை முக வளாகம், முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்துக்கு சென்று அங்குள்ள சிற்பங்களை பார்வையிட்டு அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து அவர் அங்குள்ள ஆற்றில் படகு சவாரி செய்து அரிக்கன்மேடு பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் கவர்னர் மாளிகைக்கு திரும்பினார்.

சுற்றுலா அனுபவம்

இது குறித்து கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

புதுவையில் தற்போது நடைபெற்று வரும் சுற்றுலா மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்தேன். இந்த ஆய்வு ஒரு சாகசமாக அமைந்தது. புதுச்சேரியின் ஆதார பகுதிகளை பார்த்தோம். இதில் கைவினை கிராமத்தின் பின்னால் உள்ள நீர்நிலையும் ஒன்று. நாங்கள் அரிக்கன்மேடு பகுதியில் படகு சவாரி செய்தோம்.

பண்டைய கால சுவர்களை பார்க்கும் போது 2,200 ஆண்டுக்கு பின்னால் அழைத்துச் சென்றது. தற்போது சுற்றுச் சூழல் சுற்றுலாவின் அடிப் படையில் மாங்குரோவ் காடுகளில் படகில் பயணித்தது, பண்டைய கால அரிக்கன்மேட்டை பார்வையிட்டது சிறந்த சுற்றுலா அனுபவத்தை தந்தது.

மேம்பாட்டுக்கு ரூ.200 கோடி

தொல்பொருளியல், சதுப்பு நில காடுகளில் படகு சவாரி செய்தது, கலை சார்ந்த கைவினை கிராமம், அருங்காட்சியகம், கலாசார குடியிருப்பை பார்வையிட்டதன் மூலம் தனித்துவ அனுபவம் கிடைத்துள்ளது. இதன் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.200 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் 2023-ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும். அதன்பின் கைவினை கலைஞர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், நீர் விளையாட்டு வீரர்கள், சுற்றுலா பயணிகள் அனைவருக்கும் சிறந்த சுற்றுலா அனுபவத்தை தரும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story