கவிமணிக்கு அவர் பிறந்த ஊரில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் ; மக்கள் குறைதீர்க்கும் நாளில் பல்வேறு அமைப்புகள் மனு


கவிமணிக்கு அவர் பிறந்த ஊரில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் ; மக்கள் குறைதீர்க்கும் நாளில் பல்வேறு அமைப்புகள் மனு
x
தினத்தந்தி 25 Feb 2020 3:15 AM IST (Updated: 24 Feb 2020 8:44 PM IST)
t-max-icont-min-icon

கவிமணிக்கு அவர் பிறந்த ஊரில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மக்கள் குறைதீர்க்கும் நாளில் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

நாகர்கோவில், 

மக்கள் குறைதீர்க்கும் முகாம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் வாங்கினார். அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இலவச வீட்டுமனை பட்டா, கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 657 மனுக்கள் கொடுத்தனர்.

அந்த மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, அவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். இதில் அனைத்து துைற அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

நாகர்கோவிலை அடுத்த மணிக்கட்டிபொட்டல் அருகே உள்ள கோவில்விளை, சின்னணைந்தான்விளை, உடையப்பன்குடியிருப்பு, முகிலன்விளை, மேல உடையப்பன்குடியிருப்பு ஆகிய ஊர் மக்கள் சார்பில் கோவில்விளை ஊர்தலைவர் பாலகிரு‌‌ஷ்ணன் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது.. அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

எங்கள் ஊரில் அரசு ஆரம்ப பள்ளி, சி.எஸ்.ஐ. ஆலயம், அங்கன்வாடி மழலையர் பள்ளி, கோவில்கள், விளையாட்டு மைதானம் ஆகியவை அமைந்துள்ளது. எங்கள் ஊர் மக்களும், சுற்றுவட்டார பொதுமக்களும் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். இந்த ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் புதிதாக ஒரு டாஸ்மாக் மதுபான கடையை ஊரின் மத்தியில் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை அறிந்து இரண்டு, மூன்று முறை போராட்டம் நடத்தினோம். அதன்பிறகு டாஸ்மாக் கடை அமைக்கும் முயற்சி கைவிடப்பட்டது.

ஆனால் அந்த மதுபான கடைக்கான அனுமதி இன்னும் நிலுவையில் உள்ளது. எனவே மேலும் அதற்குரிய அதிகாரிகளைக் கொண்டு டாஸ்மாக் கடை திறக்க முயற்சி நடந்து வருகிறது. எனவே எங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், மக்களின் அமைதி வாழ்க்கை சீர்குலையாமல் இருக்கவும் இந்த மதுபானக்கடையின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

தென்குமரி எழுத்தாளர் இயக்க தலைவர் முத்துக்குமார், தெற்கு எழுத்தாளர் இயக்க தலைவர் திருத்தமிழ்த்தேவனார், தமிழ்நலமன்ற நிறுவன தலைவர் சுயம்புலிங்கம், தமிழ்நாடு தமிழ்ச்சங்க தலைவர் இனியன்தம்பி மற்றும் பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சிகளின் நிர்வாகிகள் சிவதாணு, அய்யப்பன்பிள்ளை, சங்கரபாண்டியன், தெய்வராஜன் உள்பட பலர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கவிமணி தேசிக விநாயகம்பிள்ளைக்கு குமரி மாவட்டத்தில் மணிமண்டபம் கட்டுவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளதை வரவேற்கிறோம். அதேவேளையில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறந்த ஊரான தேரூரில் மணிமண்டபம் கட்டாமல், தோவாளையில் மணிமண்டபம் கட்ட இருப்பதை தமிழ் அமைப்புகளைச் சார்ந்த நாங்களும், எழுத்தாளர்களும், மக்களும் விரும்பவில்லை. எனவே தோவாளையில் மணிமண்டபம் கட்டுவதை தாங்கள் பரிசீலனை செய்ய வேண்டும். அவர் பிறந்த தேரூரில் மணிமண்டபம் கட்டப்பட வேண்டும். அவ்வாறு அமைக்கப்படுவதுதான் சிறப்பானதாகும். அதுதான் அவருக்குச் செய்யும் மரியாதையும் ஆகும். எனவே தோவாளையில் கவிமணி தேசிக விநாயகம்பிள்ளைக்கு மணிமண்டபம் கட்ட இருக்கும் திட்டத்தை கைவிட்டு விட்டு தேரூரில் மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் சீலன் கொடுத்துள்ள மனுவில், கணியாகுளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புத்தேரி குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரி, நீர் நிரப்பி பொதுமக்கள் மற்றும் விவசாய பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும். அதேபோல் பத்மநாபபுரம் தொகுதி குமாரபுரம் நகர பஞ்சாயத்து மணலிக்கரை அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தை சீரமைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பச்சைத்தமிழகம் கட்சியின் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் கொடுத்த மனுவில், அடிப்படை வசதிகள் இல்லாததால் பொலிவிழந்த நிலையில் காணப்படும் முட்டம் சுற்றுலாத்தலத்தை சீரமைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, கொட்டாரம் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் தனித்தனியாக மனு கொடுத்தனர். அதில், நாங்கள் மிகவும் ஏழ்மை நிலையில் கடந்த பல ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். எனவே அஞ்சுகிராமம் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்படுகின்ற தொகுப்பு வீட்டில் எங்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும். என்று கூறப்பட்டு இருந்தது.

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி மனு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு லெனினிஸ்டு (விடுதலை) கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பாலசுந்தரம், மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து, ஏ.ஐ.சி.சி.டி.யு. மாவட்ட தலைவர் சுசீலா உள்பட பலர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், தமிழகத்தில் தேசிய குடியுரிமைச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்றவற்றுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தேசிய மக்கள் தொகை பதிவேடு வருகிற 1-ந் தேதி முதல் கணக்கெடுப்பு தொடங்குவதை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 

Next Story