திருச்சி பெண் கொலை வழக்கில் கீழ்கோர்ட்டு தீர்ப்பு ரத்து: டிரைவருக்கு ஆயுள் தண்டனை; கூட்டாளிக்கு 3 ஆண்டு சிறை மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


திருச்சி பெண் கொலை வழக்கில் கீழ்கோர்ட்டு தீர்ப்பு ரத்து: டிரைவருக்கு ஆயுள் தண்டனை; கூட்டாளிக்கு 3 ஆண்டு சிறை மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 25 Feb 2020 5:00 AM IST (Updated: 24 Feb 2020 10:21 PM IST)
t-max-icont-min-icon

திருச்சி பெண் கொலையில் தொடர்புடையவர்களை கீழ்கோர்ட்டு விடுவித்ததை ரத்து செய்து டிரைவருக்கு ஆயுள்தண்டனையும், அவருடைய கூட்டாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை,

திருச்சி பாரத மிகுமின் நிறுவன (பெல்) குடியிருப்பில் வசித்து வந்தவர் மகாலட்சுமி (வயது 70). இவருடைய மகன் பெல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். 7.7.2011 அன்று மகாலட்சுமி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவரின் மகனுக்கு பழக்கமான டிரைவர் முரளி வீட்டுக்குள் புகுந்து மகாலட்சுமியை கொலை செய்துவிட்டு, அவரது கழுத்தில் அணிந்து இருந்த 16 பவுன் தங்கச்சங்கிலியை கொள்ளையடித்துச் சென்றார். அவருக்கு உடந்தையாக வீட்டின் வெளியில் கார்த்திக் என்பவர் நின்று இருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக திருச்சி பெல் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

2 பேர் விடுவிப்பு

இந்த வழக்கு திருச்சி கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. முடிவில், அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை எனக்கூறி, இருவரையும் விடுவித்து திருச்சி கோர்ட்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து போலீஸ் தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் ராஜா, புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

ஆயுள் தண்டனை

முடிவில், இந்த வழக்கில் கீழ்கோர்ட்டு தீர்ப்பை நீதிபதிகள் ரத்து செய்தனர். மேலும், நகைக்காக பெண்ணை கொலை செய்த முரளிக்கு ஆயுள் தண்டனையும், அவருடைய கூட்டாளி கார்த்திக்குக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story