குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் காலிக்குடங்களுடன் முற்றுகை


குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் காலிக்குடங்களுடன் முற்றுகை
x
தினத்தந்தி 24 Feb 2020 10:30 PM GMT (Updated: 24 Feb 2020 5:54 PM GMT)

குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை காலிக்குடங்களுடன் கிராம மக்கள் முற்றுகையிட்டதால் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை, 

நெல்லை மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் ‌ஷில்பா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், உதவி கலெக்டர் மணி‌‌ஷ்நாரணவரே ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நெல்லை அருகே உள்ள பல்லிக்கோட்டை, திருத்து ஊர் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து, தங்கள் ஊரில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அவர்களில் 6 பேர் கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், அலவந்தான்குளம், பல்லிக்கோட்டை, நெல்லை திருத்து ஆகிய ஊர்களுக்கும் அங்குள்ள குடிநீர் கிணற்றில் மோட்டார் அமைத்து அதன்மூலம் குழாய்கள் வழியாக தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு அலவந்தான்குளத்திற்கு அந்த கிணற்றில் இருந்து தனியாக குழாய் அமைக்க முயற்சி செய்தனர். அதை நாங்கள் போலீசார் மூலம் தடுத்து நிறுத்தினோம்.

அப்போது தாசில்தார் தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தில் நெல்லை திருத்து, பல்லிக்கோட்டைக்கு ஒரு நாளும், அலவந்தான்குளத்திற்கு ஒரு நாளும் என்று முறைவைத்து தண்ணீர் ஏற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் எங்கள் ஊருக்கு தண்ணீர் வரக்கூடிய வால்வை உடைத்து விட்டனர். எனவே எங்கள் ஊருக்கு தினமும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத்தினர் தலைவர் மாரியப்பபாண்டியன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், சுதந்திர போராட்ட வீரர் சுந்தரலிங்கனார் பெயரில் நெல்லை கலெக்டர் அலுவலக வளாகம் செயல்பட்டு வந்தது. அதற்கான பெயர் பலகையும் இருந்தது. தற்போது அந்த பலகை அகற்றப்பட்டு உள்ளது. எனவே உடனடியாக நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுந்தரலிங்கனார் வளாகம் என்ற பெயர் பலகை வைக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

நெல்லை அருகே உள்ள தாதனூத்து கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே அந்த பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று கூறி அந்த ஊர் மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

தமிழ் புலிகள் கட்சியினர் நெல்லை மாவட்ட செயலாளர் தமிழரசு, குயிலி பேரவை மாவட்ட செயலாளர் மாடத்தி ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 வருடங்களாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், சாந்தன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழக அமைச்சரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கூறி உள்ளனர்.

திசையன்விளை அருகே உள்ள இட்டமொழியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து தங்கள் ஊரில் உள்ள முத்தாரம்மன் கோவில் அருகில் கிறிஸ்தவ ஜெபக்கூடம் அமைக்கக்கூடாது என்று கூறி மனு கொடுத்தனர்.

நெல்லை மணிமூர்த்தீசுவரம் 4-வது வார்டு வாழவந்த அம்மன் கோவில் தெரு மக்கள் கொடுத்த மனுவில், நெல்லை மாநகராட்சி சொத்து வரி விதிப்பு கணினி ரசீதில் வாழவந்த அம்மன் கோவில் தெரு என்று இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.

விசுவ இந்து பரி‌‌ஷத் அமைப்பினர் மாவட்ட செயலாளர் ஆறுமுககனி தலைமையில் வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், நெல்லை அழியாபதீஸ்வரர் கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்க வேண்டும். கோவில் நிலத்தில் சுற்றுச் சுவர் கட்டவேண்டும் என்று கூறி உள்ளனர்.

கூட்டத்தில் 71 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களையும், 30 பேருக்கு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் முதிர்வுத்தொகை ரூ.11 லட்சத்து 5 ஆயிரத்து 506-ஐயும், 9 பேருக்கு இலவச தையல் ஏந்திரங்களையும் கலெக்டர் ‌ஷில்பா வழங்கினார்.முன்னதாக, ஜெயலலிதா பிறந்தநாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அரசு அறிவித்ததையொட்டி நேற்று கலெக்டர் ‌ஷில்பா தலைமையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.

Next Story