புதுக்கோட்டை நகரில் சுற்றித்திரியும் வனவிலங்குகளுக்கு சரணாலயம் அமைக்கக்கோரி கலெக்டரிடம் மனு


புதுக்கோட்டை நகரில் சுற்றித்திரியும் வனவிலங்குகளுக்கு சரணாலயம் அமைக்கக்கோரி கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 24 Feb 2020 11:00 PM GMT (Updated: 24 Feb 2020 7:14 PM GMT)

புதுக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் புதுக்கோட்டை நகரில் சுற்றித்திரியும் வனவிலங்குகளுக்கு சரணாலயம் அமைக்கக்கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது விலையில்லா வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, வங்கி கடன், பசுமைவீடு, சாலைவசதி, குடிநீர் வசதி, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 372 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன் உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

வனவிலங்கு சரணாலயம்

கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட செயலாளர் நியாஸ் அகமது தலைமையில் கட்சியினர் மரக்கன்றுகளுடன் வந்து மனு அளித்தனர். அந்த மனுவில், புதுக்கோட்டை சுற்றியுள்ள வனக்காடுகளை அழித்துவிட்டு, தைலமரங்களை வனத்துறையினர் வளர்த்து வருகின்றனர். இதனால் வன விலங்குகள் காட்டை விட்டு வெளியேறி உள்ளன.கஜா புயல் தாக்கியபோது அதிக அளவில் மரங்கள் சாய்ந்ததாலும், குரங்குகள் வசித்து வந்த இடத்தில் உள்ள மரங்களை அகற்றிவிட்டு மருத்துவக்கல்லூரி அமைக்கப்பட்டது. இதனால் குரங்குகள் இருக்க இடம் இல்லாமல் சாலையில் சுற்றித்திரிவதால், வாகனங்களில் அடிப்பட்டு இறந்து வருகின்றன. சில குரங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை அச்சுறுத்தி வருகின்றன. எனவே வனவிலங்குகளை பாதுகாக்கும் வகையில் புதுக்கோட்டையில் பல வகையான கனிகளை தரக்கூடிய மரங்களை உருவாக்கி வனவிலங்கு சரணாலயம் அமைக்க வேண்டும் எனக்கூறியிருந்தனர்.

ஊராட்சி செயலாளர்

கூட்டத்தில் திருமலைராய சமுத்திரம் சிறுவாய்ப்பட்டி ஊர்பொதுமக்கள் கொடுத்த மனுவில், பானுமதி என்பவர் கடந்த 13 ஆண்டுகளாக திருமலைராய சமுத்திரம் ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வருகிறார். அவர் எங்களுக்கு தேவையான குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி மற்றும் 100 நாள் வேலை திட்டம் போன்ற அனைத்திற்கும் எந்த குறைகளும் இல்லாமல் பணியாற்றி வருகிறார். அவர்மீது சொல்லப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளும் உண்மைக்கு புறம்பானவை. எனவே எங்களது ஊராட்சி செயலாளர் பானுமதியை தொடர்ந்து எங்களது ஊராட்சியிலேயே பணியாற்ற வழிவகை செய்ய வேண்டும் எனக்கூறியிருந்தனர்.

பல்லுயிர் மேலாண்மை குழு

கூட்டத்தில் திருவரங்குளம் ஒன்றியம் புதுக்கோட்டை விடுதி ஊராட்சி மேலநெம்பக்கோட்டையை சேர்ந்த சண்முகநாதன் என்பவர் கொடுத்த மனுவில், எங்களது ஊராட்சியில் பெண் உறுப்பினர்களின் கணவர்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற மாதாந்திர கூட்டத்தில் பெண் உறுப்பினர்களின் குடும்பத்தார்கள் தான் அதிகம் பேசினார்கள். எனவே பெண் உறுப்பினர்களை சுதந்திரமாக செயல்படவிடும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியிருந்தார்.

இதேபோல அவர் கொடுத்த மற்றொரு மனுவில், புதுக்கோட்டை விடுதி ஊராட்சியில் தற்போது உருவாக்கப்பட்டு உள்ள பல்லுயிர் மேலாண்மை குழு வெளிப்படை தன்மை இல்லாமல் உருவாக்கப்பட்ட குழுவில் உள்ளவர்கள் ஊராட்சி பதவியில் உள்ளவர்களின் உறவினர்களாக இருப்பதால், இந்த குழு அரசுக்கு எதிராக செயல்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இந்த குழுவை கலைத்துவிட்டு, புதிய குழுவை கிராமசபை கூட்டத்தில் தேர்ந்தெடுக்க வேண்டும் எனக்கூறியிருந்தனர்.

Next Story