ஆபாச படங்கள், வதந்தி பரப்புவதை தடுக்க சமூக வலைத்தள பதிவுகளை போலீசார் கண்காணிப்பு


ஆபாச படங்கள், வதந்தி பரப்புவதை தடுக்க சமூக வலைத்தள பதிவுகளை போலீசார் கண்காணிப்பு
x
தினத்தந்தி 25 Feb 2020 4:30 AM IST (Updated: 25 Feb 2020 3:01 AM IST)
t-max-icont-min-icon

ஆபாச படங்கள் மற்றும் வதந்தி பரப்புவதை தடுக்கும் வகையில் சமூக வலைத்தள பதிவுகளை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

தேனி,

தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், சமூக வலைத்தள பிரிவு செயல்படுகிறது. இதற்காக போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். முகநூல், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மாவட்ட போலீஸ் துறைக்கு என்று தனியாக பக்கம் உருவாக்கி அதன் மூலம் பல்வேறு விழிப்புணர்வு கருத்துகளை போலீசார் பரப்பி வருகின்றனர். சாலை பாதுகாப்பு, பெண் குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு கருத்துகளை ‘மீம்ஸ்’ வடிவில் உருவாக்கி பதிவிட்டு வருகின்றனர். முகநூலில் தேனி மாவட்ட போலீஸ் துறையின் பக்கத்தை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பின்தொடர்கின்றனர்.

சமூக வலைத்தள பக்கங்களில் தேனி மாவட்டம் தொடர்பான பதிவுகளை தொடர்ந்து கண்காணிக்க, சமூக வலைத்தள பிரிவு போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சமூக வலைத்தளங்களில் தேனி மாவட்டம் தொடர்பான பக்கங்கள், அவற்றில் பதிவிடும் கருத்துகளை போலீசார் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

இந்தநிலையில் சமீபத்தில் ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த மாணவர்கள் சிலர் அனுமதியின்றி இருசக்கர வாகன பந்தயம் நடத்தியுள்ளனர். அதுகுறித்த படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தனர். இந்த தகவல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட சமூக வலைத்தள பிரிவு போலீசாருக்கு தெரியவந்தது. உடனே சம்பந்தப்பட்ட மாணவர்களை பிடித்து போலீசார் எச்சரித்தனர். அவர்களின் பெற்றோரை அழைத்தும் அறிவுரைகள் வழங்கினர். அதுபோல், ஆபாச படங்கள், ஆபாசமான கருத்துகளை பதிவிடும் நபர்கள், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் வதந்தி பரப்புவோர் தொடர்பாக போலீசார் கண்காணித்து வருகின்றனர். மேலும் ஆபாச பதிவுகளை தடுக்கும் வகையில், அவற்றை பதிவிடுவோரின் கணக்குகளை முடக்கி வருகின்றனர். அத்துடன், வதந்தி பரப்புவோர் மற்றும் ஆபாச பதிவுகளை பதிவிடுவோர் குறித்த பட்டியலை சேகரித்து அவர்களை கைது செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Next Story