புதுச்சத்திரம் அருகே சாயப்பட்டறை அமைக்க எதிர்ப்பு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு


புதுச்சத்திரம் அருகே சாயப்பட்டறை அமைக்க எதிர்ப்பு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 24 Feb 2020 9:39 PM GMT (Updated: 24 Feb 2020 9:39 PM GMT)

புதுச்சத்திரம் அருகே கல்யாணியில் சாயப்பட்டறை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் கலெக்டர் மெகராஜிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ளது கல்யாணி கிராமம். இங்கு புதிதாக சாயப்பட்டறை அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், அதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க கூடாது என கூறியும் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைத்தீர்க்கும் கூட்டத்தில் கிராம மக்கள் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கல்யாணி மற்றும் சுற்று வட்டாரத்தில் ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இங்கு விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. எங்கள் கிராமத்தில் போதிய குடிநீர் வசதி இல்லாததால், கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளே மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது. அதன் காரணமாக பொதுமக்களின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது.

இந்த நிலையில் கல்யாணியில் ஒரு தனியார் நிறுவனம் சார்பில் சாயப்பட்டறை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மேலும் அந்த சாயப்பட்டறையின் கழிவுநீரை அரசு கழிவுநீர் குட்டையில் விடுவதற்கும் முடிவு செய்து உள்ளனர். அவ்வாறு சாயப்பட்டறை அமைக்கப்பட்டு, குட்டையில் கழிவுநீர் விடப்பட்டால் அப்பகுதியில் நிலத்தடி நீர் முற்றிலும் பாதிக்கப்படும்.

அனுமதிக்க கூடாது

மேலும் விவசாயம் மற்றும் கால்நடை தொழில் பாதிக்கப்படுவதோடு, மக்களுக்கு சுவாச நோய் மற்றும் தொழுநோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் அப்பகுதியில் மக்கள் வாழ முடியாத சூழ்நிலை ஏற்படும். எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இப்பகுதியில் சாயப்பட்டறையோ, விவசாயத்தை பாதிக்கும் வேறு எந்த தொழிற்கூடமோ அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story