பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் 47 ஆயிரம் விவசாயிகளுக்கு கிரெடிட் கார்டு வினியோகம் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் 47 ஆயிரம் விவசாயிகளுக்கு கிரெடிட் கார்டு வினியோகம் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 25 Feb 2020 4:00 AM IST (Updated: 25 Feb 2020 3:31 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் 47 ஆயிரம் விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு வினியோகிக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார். இதுகுறித்து அவர் கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி, 

மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 65 ஆயிரத்து 953 விவசாயிகள் பதிவு செய்து உள்ளனர். இந்த திட்டத்தில் உள்ள அனைத்து பயனாளிகளுக்கும் கிசான் கிரெடிட் கார்டு வழங்க அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த கிரெடிட் கார்டு மூலம் விவசாயிகள் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வரை 4 சதவீதம் வட்டியில் எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் கடன் பெற முடியும். இதுவரை 47 ஆயிரத்து 477 பேர் கிரெடிட் கார்டு பெற்று உள்ளனர். இன்னும் 20 ஆயிரம் பேர் வரை கார்டு பெறவில்லை. அனைவரும் இந்த கிசான் கிரெடிட் கார்டை பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த மாதம் இறுதி வரை இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

ஒரே நாடு, ஒரே ரேஷன்கார்டு திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் இதுவரை 2 ஆயிரத்து 890 பேர் வேறு கடைகளில் பொருட்களை வாங்கி உள்ளனர். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 57 பேர், வேறு தாலுகாக்களில் 216 பேர், வேறு கிராமத்தில் 927 பேர், வேறு வார்டுகளில் 1,690 பேர் பொருட்களை வாங்கி உள்ளனர். இந்த திட்டத்தில் இதுவரை பெரிய அளவிலான எந்த சிக்கலும் வரவில்லை.

மேலும் முதல்-அமைச்சர் பங்கேற்ற விழா கடந்த 22-ந்தேதி சிறப்பாக முடிக்கப்பட்டு உள்ளது. இந்த விழாவில் தூத்துக்குடி மாவட்டத்துக்கு பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் அறிவித்து உள்ளார். இந்த திட்டங்கள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, திருநங்கைகள் 29 பேருக்கு தூத்துக்குடி தாலுகா பேரூரணி கிராமத்தில் இலவச வீட்டுமனை பட்டாக்களையும், ஏரல் தாலுகா திருக்களூர் கிராமத்தில் 3 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களையும், வீரபாண்டிய கட்டப்பொம்மனின் நேரடி வாரிசான வீமராஜா என்ற ஜெகவீரபாண்டிய சுப்பிரமணிய கட்டபொம்மு துரை என்பவருக்கு ரூ.17 லட்சம் மதிப்பிலான காதொலி கருவியையும் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார். தொடர்ந்து முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி கலெக்டர் தலைமையில் அலுவலர்கள், பணியாளர்கள் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில், கூடுதல் கலெக்டர் (வருவாய்) விஷ்ணுசந்திரன், தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சங்கரநாராயணன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story