லாரி சக்கரத்தில் சிக்கி கட்டிட தொழிலாளி பலி தங்கை கண் எதிரே பரிதாபம்
டிப்பர் லாரி சக்கரத்தில் சிக்கி தங்கை கண் எதிரே உடல் நசுங்கி கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
ஆவடி,
ஆவடி காமராஜர் நகர், புது நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 50), கட்டிட தொழிலாளி. கட்டிட பணியின்போது கீழே விழுந்ததில் தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது. இதற்காக செங்குன்றத்தை அடுத்த விச்சூர் பகுதியில் மாவு கட்டு போடுவதற்காக நேற்று காலை புருஷோத்தமன், தனது தங்கை பிரேமாவதி (40) உடன் மொபட்டில் சென்றார். மொபட்டை பிரேமாவதி ஓட்டினார். அவருக்கு பின்னால் புருஷோத்தமன் அமர்ந்து இருந்தார்.
ஆவடியை அடுத்த வெள்ளானூர் பகுதியில் சென்றபோது எம்.சாண்ட் மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி இவர்கள் மீது மோதியது. இதில் அண்ணன்-தங்கை இருவரும் நிலைதடுமாறி சாலையில் விழுந்தனர். இதில் டிப்பர் லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கிய புருஷோத்தமன், தனது தங்கையின் கண் எதிரேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
விரல்கள் துண்டானது
பிரேமாவதியின் வலது காலில் லாரி சக்கரம் ஏறியதில் மூன்று விரல்கள் துண்டானது. அவர் ஆவடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுபற்றி பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து டிப்பர் லாரி டிரைவரான ஆற்காட்டை சேர்ந்த மும்மூர்த்தி (31) என்பவரை கைது செய்தனர். பலியான புருஷோத்தமனுக்கு லலிதா என்ற மனைவியும், மணிகண்டன், பிரசாந்த் ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.
Related Tags :
Next Story