சர்தார் வல்லபாய் பட்டேல் கல்லூரியை மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைக்க வேண்டும் கலெக்டருக்கு, மாணவர்கள் மனு


சர்தார் வல்லபாய் பட்டேல் கல்லூரியை மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைக்க வேண்டும் கலெக்டருக்கு, மாணவர்கள் மனு
x
தினத்தந்தி 25 Feb 2020 3:45 AM IST (Updated: 25 Feb 2020 3:45 AM IST)
t-max-icont-min-icon

கோவை சர்தார் வல்லபாய் பட்டேல் கல்லூரியை, மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைக்கக்கோரி மாணவர்கள், கலெக்டரிடம் மனு அளித்தனர்.

கோவை,

கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கினார். இதில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், பல்வேறு அமைப்பினர், சங்கத்தினர் தங்களது கோரிக்கைகள் குறித்து மனுவாக அளித்தனர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில் மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் கோவையில் இயங்கி வரும் சர்தார் வல்லபாய் பட்டேல் கல்லூரி மாணவ-மாணவிகள் மனு ஒன்று அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:- கோவை அவினாசி சாலை பீளமேட்டில் மத்திய ஜவுளித்துறையின் கீழ் சர்தார் வல்லபாய் பட்டேல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியை தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் (சி.யு.டி.என்.) கீழ் கொண்டு வரவேண்டும். அவ்வாறு கொண்டு வந்தால் கல்வி கட்டணம் குறையும்.

இந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு மட்டும் தங்கும் விடுதி வசதி உள்ளது. மாணவர்களுக்கு விடுதி வசதி இல்லை. இதனால் நாங்கள் வெளியே அறை எடுத்து தங்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் கல்லூரியில் போதிய அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

கோவை மாவட்ட மகளிர் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் தலைவர் ஹேமா தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில், கோவை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பலருக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கப்படாமல் உள்ளது. எனவே எங்களுக்கு உடனடியாக வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது.

ம.தி.மு.க. பீளமேடு பகுதி செயலாளர் வெள்ளியங்கிரி அளித்த மனுவில், கோவை மாநகராட்சி 39-வது வார்டுக்கு உட்பட்ட பண்ணாரியம்மன் கோவில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் சாக்கடை அடைப்புகள் முறையாக சரி செய்யப்படுவது இல்லை. இதனால் சாக்கடை நீர் தேங்குவதுடன், கொசுத்தொல்லையும் அதிகரித்து காணப்படுகிறது. எனவே சாக்கடை அடைப்புகளை சரி செய்வதுடன், இங்குள்ள புதர்களை வெட்டி அகற்ற வேண்டும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது.

கோவை கணபதி காமராஜபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் உள்ள பொது இடத்தை (ரிசர்வ் சைட்) சிலர் ஆக்கிரமிக்க முயற்சிக்கின்றனர். எனவே காலியாக உள்ள இந்த இடத்தில் சமுதாய கூடம், விளையாட்டு மைதானம், பூங்கா, நூலகம், உடற்பயிற்சி கூடம் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தித்தர வேண்டும் என்று இருந்தது.

கோவை வரதராஜபுரத்தை சேர்ந்த நடராஜ், சித்த மருந்துகளுடன் வந்து அளித்த மனுவில், கொரோனா வைரஸ் தற்போது பல நாடுகளில் பரவி வருகிறது. இந்த நோயை குணப்படுத்த சித்த மருந்து உள்ளது. இதனை நான் கண்டுபிடித்து உள்ளேன். இதனை அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று இருந்தது.

கலைஆசிரியர்கள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் ராஜ்குமார் அளித்த மனுவில், கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் முத்திரையை சிலர் தவறாக பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story