கடலூர் அருகே பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம் கொண்டு வரப்படும் அமைச்சர் எம்.சி.சம்பத் பேச்சு


கடலூர் அருகே பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம் கொண்டு வரப்படும் அமைச்சர் எம்.சி.சம்பத் பேச்சு
x
தினத்தந்தி 25 Feb 2020 5:00 AM IST (Updated: 25 Feb 2020 4:09 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் அருகே பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம் கொண்டு வரப்படும் என்று கடலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.

கடலூர்,

அ.தி.மு.க. கடலூர் மத்திய மாவட்டம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தேரடித்தெருவில் நடைபெற்றது. இதற்கு கடலூர் நகர செயலாளர் குமரன் தலைமை தாங்கினார். நகர அவைத்தலைவர் எம்.ஜி.ஆர். என்கிற ராமச்சந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் ஆர்.வி.மணி, வெங்கட்ராமன், ஜரினாபேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது:-

நம்மை வழிநடத்தி வாழவைத்து அழகுபார்த்த தெய்வமான மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்கிறோம்.

வேளாண் மண்டலத்துக்குள் வராது

விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையை ஏற்று காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததன் மூலம் விவசாயிகள், விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கு இந்த அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.

கடலூர் அருகே செயல்படாத நிலையில் உள்ள தனியார் ஆயில் நிறுவனத்துக்கு சொந்தமான 2,500 ஏக்கர் நிலத்தில் ரூ.50 ஆயிரம் கோடியில் தனியார் நிறுவனம் மூலம் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம் கொண்டு வரப்படும். ஏனெனில் இந்த பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்துக்குள் வராது.

சபதம் ஏற்க வேண்டும்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைசிறந்த ஆட்சி நடத்திகொண்டிருப்பதை பார்த்து பொறாமைப்படும் மு.க.ஸ்டாலின் சிறுபான்மை சமுதாயத்தினரை குழப்பம் அடைய செய்கிறார். குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க பார்க்கிறார், அது முடியாது.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரை மனதில் நினைத்து நடைபெற உள்ள நகராட்சி, மாநகராட்சி தேர்தலிலும், வருகிற 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் கடலூர் மாவட்டம் 100 சதவீதம் வெற்றியை கொட்டி குவித்த மாவட்டம் என்ற பெயரை பெற்றுத்தர அனைவரும் சபதம் ஏற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் சேவல்குமார், கடலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பழனிசாமி, கடலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தெய்வபக்கிரி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிசெயலாளர் பெருமாள்ராஜா, அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.ஆர்.பாலகிரு‌‌ஷ்ணன், மீனவர் அணி செயலாளர் கே.என்.தங்கமணி, விவசாய பிரிவுசெயலாளர் காசிநாதன், வக்கீல் அணி செயலாளர் மாசிலாமணி, மாணவர் அணி செயலாளர் கலையரசன், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஏ.கே.சுப்பிரமணியன், வர்த்தக அணி செயலாளர் வரதராஜன், முன்னாள் தொகுதி இணை செயலாளர் பாலகிரு‌‌ஷ்ணன், எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் ஜே.கண்ணன், முன்னாள் கவுன்சிலர்கள் தமிழ்செல்வம், சாந்தி, ராஜூ, செல்வி வேல்முருகன், மகளிர் அணி செயலாளர் கம்சலா மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, வார்டு நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முடிவில் நகர துணை செயலாளர் கந்தன் நன்றி கூறினார்.

Next Story