இளைஞர்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை கொண்டுவர முடியும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேச்சு


இளைஞர்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை கொண்டுவர முடியும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 25 Feb 2020 4:18 AM IST (Updated: 25 Feb 2020 4:18 AM IST)
t-max-icont-min-icon

இளைஞர்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.பேசினார்.

சேத்தியாத்தோப்பு,

சேத்தியாத்தோப்பில் சந்திரா மேல்நிலைப்பள்ளியில் பா.ம.க. சார்பில் டாக்டர் அன்புமணி ராமதாசின் தம்பிகள் படை, தங்கைகள் படை மற்றும் மக்கள் படை ஆகிய முப்படைகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். கீரப்பாளையம் ஒன்றியக்குழு தலைவர் கனிமொழி தேவதாஸ் படையாண்டவர், மாநில வன்னியர் சங்க துணைத்தலைவர் செல்வராசு, முன்னாள் மாவட்ட செயலாளர் சின்னதுரை, ஒன்றிய செயலாளர்கள் சரண்ரஜ், மணியரசன், அரி புத்திரன், சங்கர், வைத்தி, சேத்தியாத்தோப்பு நகர செயலாளர் ஜெய்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார். பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே. மணி, சொத்து பாதுகாப்புக் குழு தலைவர் டாக்டர் கோவிந்தசாமி, வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா.அருள்மொழி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

ஆட்சி மாற்றம்

கூட்டத்தில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்துக்கு தேவையான பல நல்ல திட்டங்கள் நம்மிடம் உள்ளது. ஆனால் ஆட்சி நம்மிடம் இல்லை. பா.ம.க. ஆட்சிக்கு வந்தால், இலவச கல்வி, சுகாதாரத்துறையில் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடின்றி அனைவரும் உயர்தர இலவச மருத்துவம், அதேபோல் வேளாண்துறையிலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். இன்று ஆட்சி நம்மிடம் இல்லை என்றாலும், தம்பி, தங்கைகள் நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர முடியும். அதனால்தான் இளைஞர்கள், இளம்பெண்களை என் தம்பி, தங்கைகளை சந்தித்து பேசி வருகிறேன்.

பெட்ரோலிய முதலீட்டு மண்டலம்

கடலூர், நாகை மாவட்டத்தில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் வரக்கூடாது என கடந்த 2017-ல் கிராமம் கிராமமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். இதனால் தமிழக அரசு தற்போது இத்திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த பெருமை பா.ம.க.வுக்கு தான் உண்டு. இந்த ஒரு வார்த்தைக்காக தான் இத்தனை ஆண்டு காலம் போராட வேண்டிஇருந்தது. அதேபோல் காவிரி டெல்டாவை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என பல போராட்டங்கள், விழிப்புணர்வுகள் ஏற்படுத்தியும், முதல்-அமைச்சரை சந்தித்தும் கோரிக்கை வைத்தோம். தற்போது அதுவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக பா.ம.க. பாடுபட்டு வந்துள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வழங்குவதற்கான திட்டம் என்னிடம் உள்ளது. நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்துக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய வேலை வாய்ப்பு வழங்கிட வேண்டும். மேலும் ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்திட வேண்டும். இல்லையெனில் போராட்டங்கள் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் சுரே‌‌ஷ், மகளிர் அணி செயலாளர் சிலம்புச் செல்வி, தமிழரசி, முத்துகிரு‌‌ஷ்ணன், மாவட்ட மாணவரணி அருள்கோவிந்தன், வன்னியர் சங்க தலைவர் வாசு, வேல்முருகன், மோகன், கலைமணி, பரம ராஜா, செந்தில், வாசுதேவன், தங்கமணி, செல்லப்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story