பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் 50 வழக்குகளில் தொடர்பு தமிழகத்தை சேர்ந்த பிரபல ரவுடி கைது உத்தரபிரதேசத்தில் பதுங்கி இருந்தபோது சிக்கினார்
பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் 50 வழக்குகளில் தொடர்புடைய தமிழகத்தை சேர்ந்த பிரபல ரவுடியை உத்தரபிரதேசத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு,
தமிழகத்தை சேர்ந்தவர் பரத் என்ற ஸ்லம் பரத். இவர், பெங்களூரு நகரில் தங்கி இருந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். பிரபல ரவுடியான பரத் மீது பெங்களூரு ராஜகோபால்நகர், காமாட்சி பாளையா போலீஸ் நிலையங்களில் கொலை, கொைல முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.
இதுதவிர பெங்களூரு புறநகர், துமகூரு, கோலார், ராமநகர், சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களிலும் பரத் மீது வழக்குகள் உள்ளன. ஒட்டு மொத்தமாக ரவுடி பரத் மீது பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
இந்த வழக்குகளில் போலீசாரிடம் சிக்காமல் ரவுடி பரத் தலைமறைவாக இருந்தார். சமீபத்தில் கிரிநகர் அருகே பதுங்கி இருந்த பரத்தை ராஜகோபால்நகர் போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது போலீஸ்காரர்களை தாக்கிவிட்டு அவர் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து, ரவுடி பரத்தை கைது செய்ய வடக்கு மண்டல போலீசார் மற்றும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரம் காட்டி வந்தனர்.
உத்தரபிரதேசத்தில் கைது
இந்த நிலையில், ரவுடி பரத் உத்தரபிரதேச மாநிலத்தில் தலைமறைவாக இருப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த மாநிலத்திற்கு சென்ற போலீசார், அங்கு பதுங்கி இருந்த பரத்தை கைது செய்துள்ளனர். அவரை பெங்களூருவுக்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு, காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ரவுடி பரத்திடம் 100-க்கும் மேற்பட்ட கூட்டாளிகள் இருந்தனர். அவர்கள் மூலம் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.
அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், போலீஸ் துறையில் பணியாற்றுபவர்களுடனும் பரத்திற்கு தொடர்பு இருப்பதாகவும், அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story