மராட்டிய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது விவசாயிகள், பெண்கள் பிரச்சினையில் பா.ஜனதா அமளி


மராட்டிய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது   விவசாயிகள், பெண்கள் பிரச்சினையில் பா.ஜனதா அமளி
x
தினத்தந்தி 25 Feb 2020 5:40 AM IST (Updated: 25 Feb 2020 5:40 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. விவசாயிகள், பெண்கள் பிரச்சினையில் பா.ஜனதா அமளியில் ஈடுபட்டது.

மும்பை, 

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மராட்டிய சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத் தொடரில் விவசாயிகள் பிரச்சினை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்டவை தொடர்பாக சட்டசபையில் புயலை கிளப்ப பிரதான எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா திட்டமிட்டு இருந்தது.

அதன்படி சபை கூடியதும் எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் பேசினார். அப்போது, சிவசேனா தலைமையிலான மாநில அரசு கொண்டு வந்துள்ள கடன் தள்ளுபடி திட்டத்தின் பலனை விவசாயிகள் பெறவில்லை. 20 ஆயிரம் பேர் மட்டுமே கடன் தள்ளுபடி பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

பா.ஜனதா அமளி

சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு முன், பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தின. ஆனால் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதில் தெளிவு இல்லை.

இதுகுறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்றார். மேலும் மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் குற்றங்கள் குறித்து விவாதிக்க வேண்டும், என்றார்.

அவை ஒத்தி வைப்பு

இதையடுத்து பாரதீய ஜனதா உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று அமளியில் ஈடுபட்டனர். மாநில அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

இந்த அமளிக்கு மத்தியில் ரூ.24 ஆயிரம் கோடிக்கு 2019-2020-ம் ஆண்டுக்கான துணை மானிய கோரிக்கைகள் மற்றும் 2014 முதல் 2017 வரையிலான வரவு-செலவு அறிக்கை ஆகியவற்றை நிதி மந்திரி அஜித் பவார் தாக்கல் செய்தார்.

இந்தநிலையில், மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து பாரதீய ஜனதா உறுப்பினர்கள் தங்கள் இருக்கைகளுக்கு திரும்பினர். மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் புஷ்பசென் சாவந்த், கிசான்ராவ் ராவுத் ஆகியோருக்கு அவையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து சபாநாயகர் நானா பட்டோலே சபையை நாள் முழுவதும் ஒத்தி வைத்தார்.

இதேபோல மேல்-சபையும் தொடங்கிய 15 நிமிடங்களில் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

Next Story