கரும்பு விவசாயிகள் 2–ம் நாளாக கஞ்சி காய்ச்சும் போராட்டம்; முத்தரப்பு பேச்சு தோல்வி
போளூர் அருகே கரும்பு விவசாயிகள் 2–ம் நாளாக கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர். முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் நடைபயணம் மேற்கொண்ட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
போளூர்,
போளூர் அருகே உள்ள கரைப்பூண்டி கிராமத்தில் தனியார் சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலையில் கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவை தொகை ரூ.26 கோடி உள்ளது. இந்த தொகையை வழங்கக்கோரி கரும்பு விவசாயிகள் நேற்று முன்தினம் சர்க்கரை ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து விவசாயிகள் நேற்று முன்தினம் இரவு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுட்டனர். விடிய, விடிய விவசாயிகள் அங்கேயே காத்திருந்தனர்.
தொடர்ந்து 2–வது நாளாக நேற்றும் கரும்பு விவசாயிகளின் போராட்டம் நடந்தது. அப்போது கரும்பு விவசாயிகள் கூறுகையில், ‘‘கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக கரும்பு ஆலை நிர்வாகம் ரூ.52 கோடி நிலுவை தொகையை வழங்கவில்லை. தொடர்ந்து கரும்பு விவசாய சங்கத்தினர் நடத்திய தொடர் போராட்டத்தின் விளைவாக 3 மாதத்திற்கு முன் ரூ.26 கோடியை வழங்கினர். மீதமுள்ள ரூ.26 கோடியை ஜனவரி 31–ந் தேதி வழங்குவதாக உறுதி அளித்தனர்.
ஆனால் இது நாள் வரை ஆலை நிர்வாகம் பணத்தை வழங்கவில்லை. எனவே தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொதுச்செயலாளர் டி.ரவீந்திரன் தலைமையில் சுமார் 200 கரும்பு விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தற்போது வெட்டுவதற்காக காத்திருக்கும் கரும்பை வேறு ஆலைக்கு அனுப்புமாறு கோஷமிட்டனர். தொடர்ந்து விவசாயிகள் நேற்று காலை கஞ்சி காய்ச்சி சாப்பிட்டனர்.
கஞ்சி காய்ச்சி போராட்டம் நடத்திய கரும்பு விவசாயிகள் திடீரென ‘கோ பேக் டிரம்ப்’ என்ற வாசகம் உள்ள பேனரை வைத்து கோஷமிட்டனர். இது குறித்து சங்க துணை துணைப் பொதுச்செயலாளர் ரவீந்திரன் கூறுகையில், ‘‘இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ரூ.42 ஆயிரம் கோடி வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடிவு செய்து உள்ளார். அதில் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு கோழி ‘லெக்பீஸ்’ மற்றும் பால் பவுடர் பொருட்களை இறக்குமதி செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இதன் விலை தற்போது உள்ள இந்திய மார்க்கெட்டின் விலையை விட குறைவு.
இதனால் இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்படையும் சூழல் உருவாகும். எனவே அந்த ஒப்பந்தத்தில் பிரதமர் கையெழுத்திடக் கூடாது என கூறி ‘கோ பேக் டிரம்ப்’ என்ற கோஷத்துடன் பேராட்டத்தில் ஈடுபட்டதாக கூறினார்.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. அதில் ஆரணி வருவாய் கோட்டாட்சியார் மைதிலி தலைமையில் தாசில்தார் ஜெயவேல், போளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண்குமார் ஆகியோரும், ஆலை தரப்பில் பொது மேலாளர் கந்தசாமி, துணை பொது மேலாளர் (கரும்பு) ராஜு, மேலாளர் ஜோசப் ஆகியோரும், கரும்பு விவசாயிகள் தரப்பில் சங்க மாநில பொதுச்செயலாளர் டி.ரவீந்திரன், போளூர் வட்ட தலைவர் ஜி.மணி, மாநில துணைத்தலைவர் ஜனார்த்தனன், மாவட்ட செயலாளர் சுப்பிரமணி, செயலாளர் பாலமுருகன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
வருகிற மார்ச் 31–ந் தேதிக்குள் பாக்கி தொகை வழங்குவதாக ஆலை நிர்வாகம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. அதன்படி போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் மார்ச் 31–ந் தேதியிட்ட காசோலை வழங்குமாறு கேட்டனர். ஆனால் அதற்கு ஆலை நிர்வாகத்தினர் ஒப்புதல் தரவில்லை. தற்போது குறைந்தபட்சம் இங்குள்ள விவசாயிகளுக்கு நிலுவையில் 50 சதவீதம் தருமாறும் கோரியதற்கும் ஆலை நிர்வாகம் ஒப்புதல் அளிக்கவில்லை.
இதற்கிடையில் வெட்டுக்காக காத்திருக்கும் 55 டன் கரும்பு செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கும், 45 டன் கரும்பு பன்னாரி சர்க்கரை ஆலைக்கும் அனுப்பவும் ஆகும் கூலி, போக்குவரத்து செலவையும் இந்த சர்க்கரை ஆலை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் கந்தசாமி உத்தரவு பிறப்பித்தார். இதை ஆலை நிர்வாகம் ஏற்றுக்கொண்டனர்.
கரும்பு விவசாயிகளுக்கு மார்ச் 31–ந் தேதிக்குள் பணம் வழங்குவோம் என்ற நிலைப்பாட்டில் ஆலை நிர்வாகம் உறுதியாக இருந்தது. எனவே பிற்பகல் 2.15 மணி வரை நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனை தொடர்ந்து திருவண்ணணமலை கலெக்டர் அலுவலகத்துக்கு நடைபயணமாக சென்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியை சந்தித்து கோரிக்கை விடுக்க விவசாயிகள் புறப்பட்டனர். அவர்களிடம் போலீசார் வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் கரும்பு விவசாயிகள் 100 பேரை இன்ஸ்பெக்டர் அருண்குமார் தலைமையிலான போலீசார் கைது செய்தார்.
Related Tags :
Next Story