தூத்துக்குடியில் கடல் வாழ் உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி
தூத்துக்குடியில் கடல்வாழ் உயிரினங்கள குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நேற்று நடந்தது.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் கடல்வாழ் உயிரினங்கள குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நேற்று நடந்தது.
கண்காட்சி
தூத்துக்குடி மாவட்ட மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளை சார்பில் கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு கண்காட்சி தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடந்தது. கண்காட்சி தொடக்க விழாவுக்கு தூத்துக்குடி மாவட்ட உதவி வனபாதுகாவலர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். காமராஜ் கல்லூரி முதல்வர் நாகராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளை இயக்குனர் மற்றும் வனஉயிரின காப்பாளர் ஏ.எஸ்.மாரிமுத்து கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
கடல்வாழ் உயிரினங்கள்
மன்னார் வளைகுடா கடல் பகுதி ராமேசுவரம் முதல் கன்னியாகுமரி வரை 10 ஆயிரத்து 500 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்டது. இதில் 21 தீவுகள் உள்ளன. இந்த கடல் பகுதியில் 4 ஆயிரத்து 200–க்கும் அதிகமான அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் உள்ளன. இந்த கடல் வாழ் உயிரினங்களின் பதப்படுத்திய மாதிரிகள் கண்காட்சியில் வைக்கப்பட்டு உள்ளன. இதில் திமிங்கலம் வகைகள், ஓங்கிகள், கடல் பசு, கடல் ஆமை, சுறா, கங்கை சுறா, பனை மீன், பால் சுறா, கடல்குதிரை, திருக்கை, வேளா மீன், கடல் தாவரங்கள், பவளப்பாறைகள், கடல் விசிறிகள், கடல் அட்டைகள், கடல் பஞ்சுகள், சங்கு வகைகளும் கண்காட்சியில் இடம் பெற்று இருந்தன.
கண்காட்சியில் கடல் வாழ் உயிரினங்களின் உணவுச்சங்கிலி முறை, அதன் முக்கியத்துவம் குறித்தும், சுற்றுச்சூழல் மாசு, புவி வெப்பமயமாதல் போன்றவற்றால் மன்னார் வளைகுடா பகுதியில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் மாணவ, மாணவிகளுக்கு விளக்கி கூறப்பட்டது.
கண்காட்சியை தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை தூத்துக்குடி மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனச்சரக அலுவலர் ரகுவரன், வனவர்கள் மதனகுமார், முத்துராம், அருண்குமார், வனகாப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் ஆகியோர் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story