ஆரணி கோதண்டராமர் கோவிலில் அமைச்சர் ஆய்வு


ஆரணி கோதண்டராமர் கோவிலில் அமைச்சர் ஆய்வு
x
தினத்தந்தி 26 Feb 2020 3:15 AM IST (Updated: 25 Feb 2020 7:10 PM IST)
t-max-icont-min-icon

ஆரணி கோதண்டராமர் கோவிலில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.

ஆரணி, 

ஆரணி கொசப்பாளையம் தச்சூர் ரோட்டில் உள்ள கோதண்டராமர் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதாகும். இக்கோவிலுக்கு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று கோவில் திருப்பணி குழுவினர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரனிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

அதன் அடிப்படையில் நேற்று அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் இரா.செந்தில்வேலவனுடன் கோவிலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது திருப்பணி குழுவினர் கொடுத்த கோரிக்கை மனுவில், கோவில் முழுவதும் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பிரம்மோற்சவத்தின்போது தேர் வெள்ளோட்டம் நடைபெற்று வந்தது. தற்போது தேர் இல்லை. அறநிலையத்துறை சார்பாக புதிய தேர் வடிவமைத்து தரவேண்டும். கோயில் உள்வளாகத்தில் உள்ள குளத்தை சீரமைத்து தீர்த்தவாரி விழா நடத்த அனுமதி தரவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

மேலும், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆரணி பகுதியில் உள்ள கோவில்களில் பூஜைகளையும் பணிகளையும் மேற்கொண்டு வரும் சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள் நீண்டகாலமாக வேலை செய்து வருகின்றனர். அவர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும் கோரிக்கை மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் அதிகாரிகளிடம் கொடுத்து, இந்த மனு குறித்து உடனடியாக பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

ஆய்வின்போது நகர கூட்டுறவு வங்கி தலைவர் அசோக்குமார், ஆவின் துணைத்தலைவர் பாரி பி.பாபு, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் எஸ்.ஜோதிலிங்கம், திருப்பணி குழுவை சேர்ந்த தொழிலதிபர்கள் என்.ரமேஷ்பாபு, என்.சுரேஷ்பாபு, பரமேஸ்வரன், பாஸ்கரன், விஷ்ணு, பழனி, இந்து சமய அறநிலையத்துறை உதவி பொறியாளர் (பொறுப்பு) ராகவன், கோவில் வருவாய் ஆய்வாளர் நடராஜன், செயல் அலுவலர் சிவாஜி உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story