தூத்துக்குடி வித்யா பிரகாசம் சிறப்பு பள்ளிக்கு புதிய வாகனம் கலெக்டர் சந்தீப்நந்தூரி வழங்கினார்
தூத்துக்குடி வித்யா பிரகாசம் சிறப்பு பள்ளிக்கு புதிய வாகனம் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி,
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் சார்பில் தூத்துக்குடி வித்யா பிரகாசம் சிறப்பு பள்ளிக்கு புதிய வாகனம் வழங்கப்பட்டது.
அதனை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி வழங்கினார்.
புதிய வாகனம்
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் மூலம் தூத்துக்குடி வித்யா பிரகாசம் சிறப்பு பள்ளிக்கு புதிய வாகனம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கி புதிய வாகனத்தை பெற்று பள்ளிக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கூடுதல் கலெக்டர் (வருவாய்) விஷ்ணுசந்திரன், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் துணை பொது மேலாளர் ஸ்ரீகாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரூ.17.25 லட்சம்
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி பேசும் போது கூறியதாவது;–
தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டியில் வித்யா பிரகாசம் சிறப்பு பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்பு குழந்தைகள் படிக்கிறார்கள். கோவில்பட்டியில் உள்ள பள்ளிக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. விரைவில் அது திறக்கப்படும். தூத்துக்குடியில் உள்ள பள்ளிக்கு ஏற்கனவே ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளியில் இருந்த வாகனம் பழமையானதால் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் சார்பில் ரூ.17.25 லட்சம் செலவில் புதிய பஸ் வழங்கப்பட்டுஉள்ளது. இந்த பள்ளிகளுக்கு தேவையான வசதிகள் பல்வேறு நிறுவன சமூக பொறுப்பு நிதியின் கீழ் செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) பாலசுப்பிரமணியம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் மேலாளர் ராஜாராம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story