கல்வி மாவட்ட அளவிலான தடகள போட்டிகள்; நாளை தொடங்குகிறது


கல்வி மாவட்ட அளவிலான தடகள போட்டிகள்; நாளை தொடங்குகிறது
x
தினத்தந்தி 26 Feb 2020 3:30 AM IST (Updated: 25 Feb 2020 8:59 PM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்வி மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் நாளை தொடங்குகிறது என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை, 

சர்வதேச அளவில் பதக்கம் பெறும் திறனாய்வாளர்களை கண்டறியும் திட்டத்தின் கீழ், பள்ளிகளில் நடத்தப்பட்ட உடற்திறன் தேர்வுகளில் தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கல்வி மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் புதுக்கோட்டை கல்வி மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் நாளை (வியாழக் கிழமை) புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.

இதேபோல அறந்தாங்கி கல்வி மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் 28-ந் தேதி ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.

இதில் 100, 200 மற்றும் 400 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் மற்றும் குண்டு எறிதல் போட்டியில் 2019-20-ம் ஆண்டில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட உடற்திறன் தேர்வில் 10-க்கு 10 அல்லது ஏதாவது இரண்டு நிகழ்வுகளில் 9 மற்றும் 8 மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள் மட்டும் கலந்து கொள்ளலாம்.

மேலும் தடகள போட்டிகளில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு வகுப்பு வாரியாக ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவி 2 நிகழ்வுகளில் கலந்து கொள்ளலாம். உடற்திறன் தேர்வு நடத்தி மாவட்ட விளையாட்டு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட ஒருங்கிணைந்த அறிக்கையினை போட்டியின் போது தவறாது கொண்டுவர வேண்டும்.

கல்வி மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள பயணப்படி மற்றும் தினப்படிகள் வழங்கப்பட மாட்டாது. முதல் 3 இடங்களை பெறுபவர்களுக்கு பரிசு, சான்றிதழ்களும் வழங்கப்படும். முதல் 2 இடங்களை பெறும் மாணவ, மாணவிகள் மண்டல அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அரசு செலவில் அழைத்து செல்லப்படுவார்கள். போட்டி நடைபெறும் நாள் அன்று போட்டி நடைபெறும் இடத்திற்கு காலை 8 மணிக்கு மாணவ, மாணவிகள் வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story