குன்னூர் அருகே, ராணுவ பள்ளி வளாகத்தில் சிறுத்தைப்புலி நடமாட்டம் - பொதுமக்கள் பீதி
குன்னூர் அருகே ராணுவ பள்ளி வளாகத்தில் சிறுத்தைப்புலி நடமாடியதால் பொது மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
குன்னூர்,
குன்னூர் மற்றும் சுற்றுபுற பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, காட்டெருமை, கரடி, சிறுத்தைப்புலி போன்ற வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் சர்வ சாதாரணமாக சமீப காலங்களில் உலா வருகிறது.
கடந்த வாரத்தில் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் கன்டோன்மெண்ட் நிர்வாகத்திற்குட்பட்ட ஜெயந்தி நகர் மற்றும் நல்லப்பன் தெரு குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரத்தில் சிறுத்தைப்புலி நடமாட்டம் இருந்து வந்தது.
இது குறித்து பொது மக்கள் புகார் தெரிவித்த னர். இதனை தொடர்ந்து வனத்துறையினர் சிறுத்தைப்புலி நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். செடி கொடிகள் அடர்ந்து வளர்த்துள்ள புதர்களை அகற்ற அறிவுறுத்தி இருந்தனர்.
குன்னூர் அருகே வெலிங்டனில் ராணுவ பயிற்சி கல்லூரி உள்ளது. இந்த ராணுவ கல்லூரியின் கட்டுப்பாட்டில் ராணுவ பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ராணுவ அதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர்களின் குழந்தைகள் கல்வி கற்று வருகின்றனர். இந்த நிலையில் ராணுவ பள்ளி வளாகத்திற்குள் நேற்று அதிகாலை சிறுத்தைப்புலி ஒன்று புகுந்தது.
இதனை அந்த வழியாக நடைபயிற்சி சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள் இதுபற்றி வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கர்னல் சன்னி குரியன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். எனினும் அந்த சிறுத்தைப்புலி அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.
இதைத்தொடர்ந்து வனத்துறையினர் அந்தப்பகுதியில் பதிவாகி இருந்த கால்தடங்களை ஆய்வு செய்தனர். அப்போது அது சிறுத்தைப்புலி என்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர். மேலும் அவர்கள் காலை நேரங்களில் நாய்களுடன் நடைபயிற்சி செல்பவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
ராணுவ பள்ளி வளாகத்தில் சிறுத்தைப்புலி ஒன்று நடமாடிய சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பொதுமக்களிடையே பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story