ஹாங்காங்கில் இருந்து வந்த முதியவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு? ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டில் அனுமதி


ஹாங்காங்கில் இருந்து வந்த முதியவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு? ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டில் அனுமதி
x
தினத்தந்தி 26 Feb 2020 12:30 AM GMT (Updated: 25 Feb 2020 7:07 PM GMT)

ஹாங்காங்கில் இருந்து வந்த முதியவர் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பால் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதா? என்று சோதனை நடந்து வருகிறது.

நாகர்கோவில்,

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டு மற்றும் அறிகுறிகளை பரிசோதிக்கும் வார்டு ஆகிய 2 வார்டுகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 72 வயது முதியவர் ஒருவர் நேற்று ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் செயல்பட்டு வரும் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ள முதியவர் ஹாங்காங்கில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் வந்த அவர் மீண்டும் ஹாங்காங் செல்ல திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு புறப்பட்டு உள்ளார்.

திடீர் உடல்நலக்குறைவு

குமரி மாவட்டம் வழியாக சென்ற அவர் நாகர்கோவில் வந்தபோது திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. இதற்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றார். மேலும் தான் ஹாங்காங்கில் இருந்து சொந்த ஊர் திரும்பிய விவரத்தையும் தெரிவித்து இருக்கிறார்.

இதனையடுத்து தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகம் மாவட்ட சுகாதார துறைக்கு தகவல் தெரிவித்தது. அதன்பிறகு முதியவரை தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்து கொரோனா வார்டில் அனுமதித்தனர்.

ரத்தம் மாதிரி

இதுபற்றி டாக்டர்களிடம் கேட்டபோது, “கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு இருப்பவருக்கு ரத்தம் மற்றும் மூக்கு வழியாக எடுக்கப்பட்ட சளி ஆகியவற்றை பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளோம். பரிசோதனை முடிவுகள் வந்த பிறகுதான் அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா? என்று உறுதிபட சொல்ல முடியும். பரிசோதனை முடிவுகள் வர எப்படியும் 2 நாட்கள் வரை ஆகலாம். அதுவரையிலும் முதியவர் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு இருப்பார்” என்றனர்.

Next Story