டெல்லி கலவரத்துக்கு மோடி, அமித்‌ஷா பொறுப்பேற்க வேண்டும் - விழுப்புரத்தில் தொல்.திருமாவளவன் எம்.பி. பேட்டி


டெல்லி கலவரத்துக்கு மோடி, அமித்‌ஷா பொறுப்பேற்க வேண்டும் - விழுப்புரத்தில் தொல்.திருமாவளவன் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 26 Feb 2020 4:00 AM IST (Updated: 26 Feb 2020 1:08 AM IST)
t-max-icont-min-icon

டெல்லி கலவரத்துக்கு பிரதமர் மோடி, அமித்‌ஷா பொறுப்பேற்க வேண்டும் என்று விழுப்புரத்தில் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினார்.

விழுப்புரம்,

செஞ்சி அருகே காரை கிராமத்தை சேர்ந்த சக்திவேல் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து நேற்று காலை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். முன்னதாக அவர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காரை கிராமத்தில் சக்திவேல் என்ற ஆதிதிராவிடர் இளைஞரை பொது இடத்தில் கட்டிப்போட்டு சாதி பெயரை சொல்லி கொடூரமாக அடித்து கொலை செய்துள்ளனர். பெண்களிடம் தகாத முறையில் நடந்துள்ளதாக அவர் மீது குற்றம் சுமத்தியுள்ளனர். அப்படியே இருந்தாலும் அவரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டுமே தவிர 20 பேர் கூடி நின்று காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். இதுபோன்ற சாதிய வன்கொடுமைகளை அரசு வேடிக்கை பார்க்காமல், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும். சக்திவேலின் குடும்பத்திற்கு அரசு சார்பில் குறைந்தபட்சம் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், அதுமட்டுமின்றி அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவிற்கு வருகை தந்திருக்கிற சூழலில் தலைநகர் டெல்லியில் வன்முறை சம்பவம் தலைவிரித்தாடுகிறது. பாரதீய ஜனதா உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளை சார்ந்தவர்கள் அமைதி வழியில் போராட்டம் நடத்தி வருகிற முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் இறங்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் காவலர் ஒருவர் உள்பட 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கோடிக்கணக்கான மதிப்புள்ள பொது சொத்துகள் சூறையாடப்பட்டுள்ளன. சங்பரிவார் அமைப்பு மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டெல்லியில் நடைபெறும் வன்முறை சம்பவத்திற்கு பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்‌ஷாவும் பொறுப்பு ஏற்க வேண்டும். தலைநகரில் கூட சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க முடியவில்லை. காவல் துறையை உள்துறை அமைச்சகம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிற போதிலும் மதத்திற்கு எதிரான வன்முறை கொடுமைகள் அரங்கேறுவது வெட்கக்கேடானது. எனவே டெல்லி யூனியன் பிரதேச அரசாங்கத்திடம் காவல்துறை நிர்வாகத்தை முழுமையாக ஒப்படைக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு கூடாது என்று முஸ்லிம்கள் பல இடங்களில் அமைதியான முறையில் அறவழியில் போராடி வருகின்றனர். ஆகவே தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தமிழ்நாட்டில் இந்த சட்டங்களை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் ஆற்றலரசு, பாமரன், சேரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story