தாளவாடி அருகே கோழி-ஆட்டை கவ்விச்சென்ற சிறுத்தை


தாளவாடி அருகே கோழி-ஆட்டை கவ்விச்சென்ற சிறுத்தை
x
தினத்தந்தி 26 Feb 2020 3:30 AM IST (Updated: 26 Feb 2020 4:28 AM IST)
t-max-icont-min-icon

தாளவாடி அருகே குட்டியுடன் வந்த சிறுத்தை கோழி-ஆட்டை கவ்விச்சென்றது.

தாளவாடி, 

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஜீர்கள்ளி உள்பட மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் ஏராளமான மான், புலி, சிறுத்தை, யானை காட்டெருமை போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட தொட்டமுதிகரை கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 45). விவசாயி. இவரது வீடு் தோட்ட பகுதியில் உள்ளது. தோட்டத்தில் கோழி, ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார். இதனால் காவலுக்கு நாயும் வளர்க்கிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை தோட்டத்தில் நாய் குரைக்கும் சத்தம்கேட்டது. உடனே கனகராஜ் அங்கு சென்று பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார்.

தோட்டத்தில் கோழியை சிறுத்தை குட்டி ஒன்றும், ஆட்டை பெரிய சிறுத்தை ஒன்றும் வாயில் கவ்வியபடி இருந்தது. உடனே கையில் ஒரு கம்பை எடுத்துக்கொண்டு கனகராஜ் சத்தம்போட்டு பக்கத்து தோட்டத்தில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தார். அதற்குள் சிறுத்தை குட்டியும், சிறுத்தையும் கோழி-ஆட்டை கவ்வியபடி வனப்பகுதிக்குள் ஓடி விட்டன. கனகராஜ் இதுபற்றி ஜீர்கள்ளி வனத்துறைக்கு தகவல் தெரிவி்த்தார்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் சிறுத்தைகளின் கால் தடங்களை ஆய்வு செய்தனர். மேலும் அங்கு 2 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணித்து வருகிறார்கள். கடந்த 15 நாட்களுக்குள் அந்த பகுதியில் 2 நாய், 2 ஆடுகளை சிறுத்தைகள் வேட்டையாடி உள்ளன. இதனால் சிறுத்தைகளை கூண்டுவைத்து உடனே பிடிக்க வேண்டும் என்று விவசாயிகள் வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Next Story