கோபி கரும்பு ஆலை அலுவலகத்தில் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி விவசாயி போராட்டம்
கோபி அருகே கரும்பு ஆலை அலுவலகத்தில் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி விவசாயி ஒருவர் போராட்டம் நடத்தினார்.
கடத்தூர்,
கோபி அருகே உள்ள குள்ளம்பாளையத்தைச் சேர்ந்தவர் கருணாமூர்த்தி (வயது 59). விவசாயி. இவர் 4 ஏக்காில் கரும்பு பயிரிட்டுள்ளார். தற்போது வளர்ந்த நிலையில் உள்ள கரும்பை வெட்டுவதற்காக ஆப்பக்கூடலில் உள்ள ஒரு தனியார் சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்திருந்ததார்.
இந்தநிலையில், கருணாமூர்த்தி நேற்று மதியம் கோபியில் உள்ள சம்பந்தப்பட்ட சர்க்கரை ஆலையின் கிளை கரும்பு அலுவலகத்துக்கு கையில் கயிறுடன் சென்றார். பின்னர், அலுவலகத்திற்கு முன்புறம் உள்ள மேற்கூரையில் கயிற்றில் தூக்கு மாட்டினார்.
பிறகு, தனது தோட்டத்தில் உள்ள கரும்பை வெட்ட ஆலை நிர்வாகம் அனுமதிக்கவில்லை எனக்கூறி தூக்குப்போட்டுக்கொள்ள முயன்றார். உடனே அருகே இருந்த அலுவலர்கள் அவரை தடுத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள்.
தகவல் கிடைத்ததும், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துச்சாமி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்கொலை போராட்டம் நடத்திய கருணாமூர்த்தியிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
அப்போது கருணாமூர்த்தி, "நான் குள்ளம்பாளையத்தில் 4 ஏக்கரில் கரும்பு பயிரிட்டுள்ளேன். தற்போது கரும்பு தயாராக உள்ளது. ஆனால், ஆலை நிர்வாகத்தினர் வெட்டுவதற்கு காலதாமதம் செய்கிறார்கள். வேறு சர்க்கரை ஆலைகளுக்கு வெட்டுவதற்கும் ஆலை நிர்வாகம் அனுமதி தர மறுக்கிறது. ஏற்கனவே, கரும்பை வெட்டிச் சென்ற விவசாயிகளுக்கு அதற்கான தொகையை வழங்காமலும் இழுத்தடிக்கிறார்கள். அதனால்தான் நான் கரும்பு அலுவலகத்திலேயே தூக்குப்போட வந்தேன்" என்றார்.
இதைத்தொடர்ந்து போலீசார் கரும்பு ஆலை நிர்வாகத்திடம் இதுகுறித்து பேசுகிறோம் என்று கூறி அவரை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தார்கள்.
Related Tags :
Next Story