கும்மிடிப்பூண்டி பஸ் நிலையத்தில் தாய் பாலூட்டும் அறையை மீண்டும் திறக்க வேண்டும் மகளிர் குழுவினர் கோரிக்கை
கும்மிடிப்பூண்டி பஸ் நிலையத்தில் தாய் பாலூட்டும் அறையை மீண்டும் திறக்க வேண்டும் என்று மகளிர் குழுவினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டி,
பாலூட்டும் தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு தனிமையில் வசதியாக பாலூட்டும் வகையில் அரசு பஸ் நிலையங்கள், நகர பஸ் நிலையங்கள், பனிமனையுடன் கூடிய பஸ் நிலையங்களில் இதற்காக தனி அறைகள் அமைக்கப்படும் என மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து இருந்தார்.
அதன்படி கடந்த 2015-ம் ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்கான ஒரு புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் வாயிலாக தமிழ்நாட்டில் உள்ள முக்கிய பஸ் நிலையங்களில் பாலூட்டும் தாய்மார்கள் அறைகளை தமிழக அரசு நிறுவியது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பஸ் நிலைய வளாகத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்கான அறையை கும்மிடிப்பூண்டி பேரூராட்சி சார்பில் அமைக்கப்பட்டு, முறையாக பராமரிக்கப்பட்டும் வந்தது.
நிரந்தரமாக மூடப்பட்டது
கால போக்கில் தமிழக அரசின் இந்த சிறப்பு திட்டத்தில் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம் கவனம் செலுத்துவதை முழுமையாக நிறுத்தி கொண்டது.
மேலும், மேற்கண்ட பாலூட்டும் தாய்மார்களின் அறையை பேரூராட்சி நிர்வாகம் பராமரிக்க முன்வராமல் அந்த அறைக்கு ஒரு இரும்பு சங்கிலியால் பூட்டு போட்டு தமிழக அரசின் தாய்மார்களுக்கான இந்த சிறந்த திட்டத்திற்கு மூடு விழா நடத்திவிட்டது. தற்போது வருடகணக்கில் இந்த அறை நிரந்தரமாக மூடப்பட்டு கிடக்கிறது.
கோரிக்கை
மேற்கண்ட அறையை பயன்படுத்திக்கொள்ளும் நோக்கில் அங்கு பச்சிளம் குழந்தைகளோடு வரும் தாய்மார்கள் திறந்த வெளியில் பஸ் நிலைய வளாகத்தில் அமர்ந்து பாலூட்ட வேண்டிய அவலநிலை ஏற்பட்டு உள்ளது.
கும்மிடிப்பூண்டி பஸ் நிலையத்தில் தாய்மார்களின் நலனைக்கருத்தில் கொண்டு ஏற்கனவே அமைக்கப்பட்ட பாலூட்டும் தாய்மார்களுக்கான அறையை மீண்டும் திறந்து அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என இந்த பகுதியில் உள்ள மகளிர் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்
Related Tags :
Next Story