ராமநத்தம் அருகே, கோவில் திருவிழாவில் இருபிரிவினர் மோதல்; 10 பேர் கைது
ராமநத்தம் அருகே கோவில் திருவிழாவின் போது இருபிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக 10 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
ராமநத்தம்,
ராமநத்தம் அருகே கொரக்கவாடி கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் மாசிப்பெருவிழாவையொட்டி பரிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது காளி வேடம் அணிந்தபடி ஊர்வலமாக சென்ற கொரக்கவாடி பக்தர்கள் சிலர் தாங்கள் வைத்திருந்த முறத்தால் சிறுவர்கள் சிலரை அடித்ததாக கூறப்படுகிறது.
இதைபார்த்த ஒரங்கூர் கிராமத்தை சேர்ந்த சிலர் ஏன் சிறுவர்களை அடிக்கிறீர்கள் என்று காளி வேடமணிந்தவர்களை தட்டிக்கேட்டனர். இதையடுத்து கொரக்கவாடி மற்றும் ஒரங்கூரை சேர்ந்த இருபிரிவினரிடையே மோதல் ஏற்பட்டு, ஒருவரையொருவர் திட்டி கற்களால் தாக்கிக் கொண்டனர். அப்போது அங்கு சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், வேன் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராமநத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையிலான போலீசார் மோதலில் ஈடுபட்ட இருபிரிவினரை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்களை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதையறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றவர்களை விடுவிக்கக்கோரி ராமநத்தம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து கலைந்து போக செய்தார்.
மேலும் இந்த சம்பவம் குறித்த தனித்தனி புகார் களின் பேரில் கொரக்கவாடி மற்றும் ஒரங்கூரை சேர்ந்த 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒரங்கூரை சேர்ந்த மண்ணாங்கட்டி மகன் பிரசாந்த் (வயது 23) பரமசிவம் மகன் அறிவழகன்(21), செல்வராஜ் மகன் ஜெயகாந்தி (21), பாவாடை மகன் பாலாஜி (21), விஜய் சங்கர் மகன் ஜெகன்(21) மற்றும் கொரக்கவாடியை சேர்ந்த பிச்சை பிள்ளை மகன் ராஜ்குமார்(24), கலியமூர்த்தி மகன் கனகராஜ் (21), மனோகரன் மகன் கார்த்திக் (21), சடையன் மகன் வெங்கடேஷ் (25), கந்தசாமி மகன் முருகன் (21) ஆகிய 10 பேரை கைது செய்தனர்.
மேலும் அங்கு அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story