பெரிய கோட்டக்குப்பத்தில் வாலிபர் எரித்துக்கொலை: காதலியின் அண்ணன் உள்பட 7 பேர் கைது - பரபரப்பு தகவல்கள்


பெரிய கோட்டக்குப்பத்தில் வாலிபர் எரித்துக்கொலை: காதலியின் அண்ணன் உள்பட 7 பேர் கைது - பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 25 Feb 2020 10:45 PM GMT (Updated: 25 Feb 2020 10:38 PM GMT)

பெரிய கோட்டக்குப்பம் அருகே வாலிபரை கொன்று உடலை எரித்து சென்ற, காதலியின் அண்ணன் உள்பட 7 பேர் சிக்கினர். நண்பர் மூலம் கொலை திட்டம் தீட்டியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

வானூர்,

விழுப்புரம் மாவட்டம் பெரிய கோட்டக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர். இவருடைய மகன் ராகவன் (வயது 22). கொத்தனார். நேற்று முன்தினம் மாலை கோட்டக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு பகுதியில் நண்பர்கள் புதுவை முத்தியால்பேட்டை சிவனேசன் (23), சாமிபிள்ளைதோட்டம் சஞ்சய் (22) ஆகியோருடன் நின்று கொண்டிருந்தார். அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் ராகவனை மட்டும் கடத்திச் சென்றனர். கோட்டக்குப்பம் அய்யனார் கோவில் பின்புறம் வைத்து அவரை பயங்கர ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்து, உடலுக்கு தீவைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

இதுபற்றி தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் காதல் விவகாரத்தில் ராகவன் கொலை செய்யப்பட்டு உடல் தீவைத்து எரிக்கப்பட்டது தெரியவந்தது. அதாவது, கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்த அருணா என்ற பெண்ணை ராகவன் காதலித்து வந்தார். இவர் நர்சிங் படித்துவிட்டு, தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தார்.

இவர்களது காதல் விவகாரம் அறிந்து அருணாவை அவரது பெற்றோர், கண்டித்தனர். ஆனால் காதலை கைவிட இருவரும் மறுத்துவிட்டனர்.

இதற்கிடையில் அருணாவுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணத்துக்கு ஏற்பாடு செய்தனர். இதனால் மனமுடைந்த அருணா கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்து தற்சமயம் ஐதராபாத்தில் இருந்த ராகவன் ஊருக்கு புறப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் அவர் கோட்டக்குப்பம் வந்தார். இதுபற்றி அறிந்த அருணாவின் உறவினர்கள், நண்பர்களுடன் அங்கு பேசிக் கொண்டிருந்த ராகவனை கடத்திச்சென்று, கொலை செய்து உடலை தீ வைத்து எரித்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த கொலையில் அருணாவின் அண்ணன் அருண்குமார் (22), பிரவீன்குமார் (22), ரஞ்சித்குமார் (25), பிரகாஷ் (40), சந்தோஷ் (19), பாலாஜி (21) மற்றும் ராகவனின் நண்பர் சஞ்சய் (20) ஆகிய 7 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.

அருணா தற்கொலை செய்ததால், அதற்கு காரணமாக இருந்த ராகவனை கொன்றதாக போலீசாரிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ராகவனின் நண்பரான சஞ்சயும் ஜதராபாத்தில் ஒன்றாக வேலை செய்தார். அவரை மிரட்டி ராகவனை கோட்டக்குப்பத்துக்கு வரவழைத்து அருண்குமார் தரப்பினர் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலி தற்கொலை செய்து கொண்டதும், இதற்கு பழிக்குப்பழியாக காதலன் கொலை செய்யப்பட்டதும் கோட்டக்குப்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story