கர்நாடகத்தில் புதிய கட்டிட அனுமதி ஆன்லைன் மூலம் வழங்க முடிவு நகர வளர்ச்சித்துறை மந்திரி பைரதி பசவராஜ் பேட்டி
கர்நாடகத்தில் புதிதாக கட்டப்படும் கட்டிடங்களுக்கான அனுமதி ஆன்லைன் மூலம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக நகர வளர்ச்சித்துறை மந்திரி பைரதி பசவராஜ் கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக நகர வளர்ச்சித்துறை மந்திரி பைரதி பசவராஜ், 10 மாநகராட்சி அதிகாரிகளுடன் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்துக்கு பிறகு மந்திரி பைரதி பசவராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் நகர்ப்புறங்களில் புதிய கட்டிடங்கள் மற்றும் குடிநீர் இணைப்புக்கு படிவங்கள் மூலம் பெற்று அனுமதி வழங்கப்படுகிறது. இனி அவற்றுக்கு ஆன்லைன் மூலம் அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உரிய கட்டணத்தை செலுத்தினால் குடிநீர் இணைப்பு மற்றும் புதிய கட்டிடங்களுக்கான அனுமதி வழங்கப்படும். நகரங்களில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 4,300 வீடுகள் தலா ரூ.7½ லட்சம் செலவில் கட்டி கொடுக்க அரசு திட்டமிட்டுள்ளது.
பிளாஸ்டிக்கிற்கு தடை
கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கவும், நகரங்களில் குப்பை பிரச்சினைக்கு தீர்வு காணவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மாநிலத்தில் உள்ள 10 மாநகராட்சிகளுக்கும் நதி ஆதாரங்கள் மூலமே நீர் விநியோகம் செய்யப்படுகிறது. பெலகாவி, உப்பள்ளி-தார்வார், கலபுரகி ஆகிய நகரங்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்யும் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதற்கு உலக வங்கி நிதி உதவி வழங்க இருக்கிறது.
மாநகராட்சிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திரா உணவகங்களில் உணவு வழங்குவது திருப்திகரமாக உள்ளது. நகரங்களில் 90 சதவீத குடும்பங்களுக்கு கழிவறை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 10 சதவீத குடும்பங்களுக்கு இன்னும் 2 மாதத்தில் கழிவறை வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும்.
முதல்-மந்திரியிடம் கோரிக்கை
சாலை, கால்வாய், பாதாள சாக்கடை வசதிகளை அந்தந்த மாநகராட்சி நிர்வாகி முடிவு எடுத்து செய்து கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம்.
வருகிற 27-ந் தேதி(அதாவது நாளை) துமகூரு, 28-ந் தேதி மங்களூரு, அடுத்த மாதம்(மார்ச்) 7-ந் தேதி பெலகாவியில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன். பட்ஜெட்டில் நகர வளர்ச்சி துறைக்கு அதிக நிதி ஒதுக்குமாறு முதல்-மந்திரியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
இவ்வாறு பைரதி பசவராஜ் கூறினார்.
Related Tags :
Next Story