கர்நாடகத்தில் அரசு பஸ் கட்டணம் திடீர் உயர்வு நள்ளிரவு முதலே அமலுக்கு வந்தது


கர்நாடகத்தில் அரசு பஸ் கட்டணம் திடீர் உயர்வு   நள்ளிரவு முதலே அமலுக்கு வந்தது
x
தினத்தந்தி 26 Feb 2020 4:47 AM IST (Updated: 26 Feb 2020 4:47 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் அரசு பஸ் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டது. இந்த கட்டண உயர்வு நேற்று நள்ளிரவு முதலே அமலுக்கு வந்தது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் அரசு போக்குவரத்து கழகங்கள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதாவது பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கர்நாடக மாநில அரசு போக்குவரத்து கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி.), உப்பள்ளியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வடமேற்கு கர்நாடக சாலை போக்குவரத்து கழகம் (என்.டபிள்யூ.கே.ஆர்.டி.சி.), கலபுரகியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வடகிழக்கு கர்நாடக சாலை போக்குவரத்து கழகம் (என்.இ.கே.ஆர்.டி.சி.) மற்றும் பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் (பி.எம்.டி.சி.) ஆகிய 4 மண்டலங்கள் உள்ளன. இந்த 4 மண்டலங்களிலும் சேர்த்து மொத்தம் சுமார் 25 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

போக்குவரத்து கழகங்கள், பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தன. இதுகுறித்து அரசு ஆலோசனை நடத்தி வந்தது. இந்த நிலையில் அரசு பஸ் கட்டணத்தை 12 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த கட்டண உயர்வு நேற்று நள்ளிரவு முதலே அமலுக்கு வந்தது. பஸ் கட்டண உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வாகன நெரிசல்

அதே நேரத்தில் பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகத்திற்கு இந்த கட்டண உயர்வு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் வாகன நெரிசல் அதிகமாக இருக்கும் நிலையில், இங்கு பஸ் கட்டணத்தை உயர்த்தினால் பஸ்களில் பயணம் செய்வோரும் சொந்த வாகனத்தை பயன்படுத்துவார்கள். இதனால் வாகன நெரிசல் மேலும் அதிகரிக்கும் என்று கருதி அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Next Story