ஈரோடு அருகே தடையின்மை சான்று பெறாமல் இயங்கிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு சீல்


ஈரோடு அருகே தடையின்மை சான்று பெறாமல் இயங்கிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு சீல்
x
தினத்தந்தி 26 Feb 2020 5:45 AM IST (Updated: 26 Feb 2020 5:39 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு அருகே தடையின்மை சான்று பெறாமல் இயங்கிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

ஈரோடு, 

ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுப்பவர்கள், தடையின்மை சான்று இல்லாமல் வணிக நோக்கத்தில் தண்ணீரை பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்து வரும் சுத்திகரிப்பு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் சி.கதிரவன் உத்தரவிட்டார்.

ஈரோடு நிலநீ்ர் நிலவியல் உபகோட்ட உதவி இயக்குனர் எம்.சிவக்குமார் தலைமையிலான அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களில் அதிரடி சோதனை செய்து வருகிறார்கள்.

அதன்படி நேற்று அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டனர். அப்போது ஈரோடு அருகே உள்ள வெள்ளோடு பறவைகள் சரணாலயம் பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சோதனை செய்தனர். அப்போது அந்த நிறுவனம் நிலநீர் எடுப்பு தடையின்மை சான்று பெறாமல் இயங்கி வருவது கண்டறியப்பட்டது. 

அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவன நிர்வாகியிடம் அரசின் உத்தரவினை அதிகாரிகள் வழங்கியதுடன், நிறுவனத்துக்கு சீல் வைக்கும் அறிவிப்பையும் வழங்கினார்கள். பின்னர் அங்கு பணியில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். ஷட்டர் இழுத்து பூட்டப்பட்டு நிறுவனத்துக்கு சீல் வைக்கப்பட்டது. 

இதுகுறித்து பொதுப்பணித்துறை நிலநீர் நிலவியல் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘ஒரு வாரமாக மாநில அளவில், பல்வேறு இடங்களில் மினரல் வாட்டர் தயாரிப்பு நிறுவனங்களை பொதுப்பணித்துறையின் நிலத்தடி நீர் கண்காணிப்பு அலுவலக பொறியாளர்கள் சோதனை செய்துவருகிறார்கள். 

ஈரோட்டில் அதிகாரிகள் குழுவினர் 33 இடங்களில் சுத்திகரிப்பு நிறுவனங்கள், குடோன்களை சோதனை செய்து இருக்கிறார்கள். இதில் அனுமதி பெறாத நிறுவனங்கள் மீது சீல் வைப்பு நடவடிக்கை தொடங்கி இருக்கிறது. இந்தசோதனை தொடர்ந்து நடத்தப்படும்’ என்றார்கள்.

Next Story