‘‘டெல்லி கலவரம் தமிழகத்திலும் நடந்துவிடாமல் தடுக்க வேண்டும்’’ அர்ஜூன் சம்பத் வலியுறுத்தல்
தென்காசி காசிவிஸ்வநாத சுவாமி கோவிலில் இந்து மக்கள் கட்சி சார்பில் அதன் தலைவர் அர்ஜுன் சம்பத் நேற்று மோட்ச தீபம் ஏற்றினார்.
தென்காசி,
‘‘டெல்லியில் நடைபெற்ற கலவரம் தமிழகத்திலும் நடந்துவிடாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்‘‘ என தென்காசியில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்.
மோட்ச தீபம் ஏற்றினார்
டெல்லியில் நடைபெற்ற கலவரத்தில் போலீஸ் ஏட்டு ரத்தன்லால் உயிரிழந்தார். அவருக்கு தென்காசி காசிவிஸ்வநாத சுவாமி கோவிலில் இந்து மக்கள் கட்சி சார்பில் அதன் தலைவர் அர்ஜுன் சம்பத் நேற்று மோட்ச தீபம் ஏற்றினார்.
பின்னர் அவர் கோவில் முன்பு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
டெல்லியில் 2 நாட்களாக நடைபெற்ற கலவரம் நாடு முழுவதும், ஏன் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஷாகீன்பாக் பகுதியில் பாகிஸ்தானின் தூண்டுதலின்பேரில் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வந்திருந்த சமயத்தில் அனைத்து மீடியாக்களும் டெல்லியில் இருப்பார்கள் என்பதை கருத்தில் கொண்டு ஆயுதங்களை ஏந்தி கலவரம் செய்துள்ளனர். போராட்டத்தை கட்டுப்படுத்த சென்ற போலீஸ்காரர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு உள்ளார்.
மத்திய அரசும், கெஜ்ரிவால் அரசும் இணைந்து இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போலீசார் மீது அமில வீச்சு நடைபெற்றுள்ளது.
போராட்டத்தை தடுக்க வேண்டும்
தமிழகத்தில் வண்ணாரப்பேட்டையில் போலீசார் தாக்கப்பட்டுள்ளனர். இதை போலீசார் சாதுர்யமாக கையாண்டு வருகிறார்கள். டெல்லியில் நடந்த கலவரம் தமிழகத்திலும் நடந்துவிடக்கூடாது. இதற்கு முன்பு நடந்த போராட்டங்கள் வன்முறையில்தான் முடிந்துள்ளன. இப்போதும் அவ்வாறு முடிய எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. போராட்டத்தை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தென்காசி தனி மாவட்டமாக உதயமானதை வரவேற்கிறோம். ஆனால், உள்கட்டமைப்பு வசதிகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும். பிரதமர் மோடியின் திட்டமான வீடு வழங்கும் திட்டம் தென்காசியில் செயல்படுகிறது. ஆனால், அதில் கட்டுமான பொருட்கள் தரம் இல்லை என கூறுகிறார்கள். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது இந்து மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவர் சக்தி பாண்டியன், ஒன்றிய செயலாளர் ஹரி கண்ணன், நகர செயலாளர் குமார் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story