கறம்பக்குடி முருகன் கோவிலை இடிக்க நெடுஞ்சாலை துறை கெடு
வருகிற 9-ந்தேதிக்குள் கறம்பக்குடி முருகன் கோவிலை இடித்து அகற்ற வேண்டும் என நெடுஞ்சாலை துறை சார்பில் கோவில் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் உள்ள புதுக்கோட்டை சாலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. கடந்த 42 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கோவிலில் சிவன், விநாயகர் தெட்சிணாமூர்த்தி, நவக்கிரகங்கள் உள்ளிட்ட சுவாமிகளுக்கு தனித்தனியே சன்னதிகள் உள்ளன. தினமும் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.
பிரதோஷம், சங்கடகர சதுர்த்தி, சஷ்டி உள்ளிட்ட நாட்களில் நூற்றுக்கணக்கான பெண்கள் இக்கோவிலுக்கு வந்து அபிஷேகம், ஆராதனைகள் செய்து வழிபடுவது வழக்கம். தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற நாட்களில் சுவாமி வீதி உலா, தேரோட்டம் போன்றவை நடத்தப்படும். இதேபோல் ஆடி மாதம் நடைபெறும் குத்து விளக்கு பூஜையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பெண்கள் கலந்து கொள்வார்கள்.
முகூர்த்த நாட்களில் இந்த கோவிலில் தினமும் 5-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறும். கடந்த 40 ஆண்டுகளில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை எளியவர்களின் திருமணம் இக்கோவிலில் நடைபெற்றுள்ளது. பழனி பாதயாத்திரை குழு, பங்குனி உத்திர யாத்திரை குழு சார்பில் தொடர் அன்னதானம், திருவாசகம் முற்றோதல் போன்றவையும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் சிறப்பும், பெருமையும் மிகுந்த இந்த கோவில் நிர்வாகத்திற்கு தமிழக நெடுஞ்சாலை துறை சார்பில், நேற்று முன்தினம் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. அதில், கறம்பக்குடி முருகன் கோவில் கட்டுமானம் முழுவதும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் இருப்பதால் அந்த ஆக்கிரமிப்பு கட்டிடம் மற்றும் பொருட்களை வருகிற 9-ந் தேதிக்குள் இடித்து அகற்றி கொள்ள வேண்டும். இல்லையேல் வருகிற 10-ந்தேதி முருகன் கோவில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த முருகன் கோவில் பக்தர்கள், பாதயாத்திரை குழுவினர், வார வழிபாட்டு குழு பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக சுற்றுவட்டார பகுதி மக்களின் வழிபாட்டு ஸ்தலமாக உள்ள முருகன் கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது சம்பந்தமாக புதுக்கோட்டை கலெக்டர் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை சந்தித்து பொதுமக்களின் உணர்வுகளை தெரிவிப்பது எனவும் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து முருகன் கோவில் பிரதோஷ வழிபாட்டு குழுவை சேர்ந்த பக்தர்கள் கூறுகையில், கறம்பக்குடியில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பேரூராட்சி பகுதி ஆக்கிரமிப்புகள் கடந்த 2 மாதமாக நடைபெற்று வருகின்றன. இதற்கு பொதுமக்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. முழு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். கடந்த 40 ஆண்டுகளில் 10-க்கும் மேற்பட்ட முறை நெடுஞ்சாலை துறை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டுள்ளன. அப்போதெல்லாம் முருகன் கோவில் குறித்து எந்த பிரச்சினையும் எழவில்லை.
ஆனால் தற்போது மட்டும் நோட்டீஸ் வழங்கப்பட்டிருப்பது பக்தர்களை வேதனை படுத்தி உள்ளது. சாமானிய மக்களுக்கான கோவில், வழிபாட்டு ஸ்தலம் என்ற வகையில் முருகன் கோவிலுக்கு விலக்கு அளிக்க வேண்டும். இந்த கோவிலால் போக்குவரத்திற்கோ, பொதுமக்களுக்கோ எந்த இடையூறும் இல்லை. எனவே மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பலித்து கறம்பக்குடி முருகன் கோவிலை அகற்றும் முடிவை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கைவிட வேண்டும் என கூறினர். கறம்பக்குடி முருகன் கோவிலை அகற்ற நெடுஞ்சாலை துறை நோட்டீஸ் வழங்கிய சம்பவம் கறம்பக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story