கார் டிரைவரை ஜாமீனில் விடுவிக்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் ஏட்டு கைது


கார் டிரைவரை ஜாமீனில் விடுவிக்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் ஏட்டு கைது
x
தினத்தந்தி 27 Feb 2020 5:00 AM IST (Updated: 26 Feb 2020 10:32 PM IST)
t-max-icont-min-icon

கார் டிரைவரை ஜாமீனில் விடுவிக்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் ஏட்டுவை போலீசார் கைது செய்தனர்.

வேலாயுதம்பாளையம்,

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே தவுட்டுப்பாளையம் என்ற இடத்தில் புலியூரை சேர்ந்த மகாமுனி என்பவர் ஓட்டி வந்த காரும், நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி எம்.எஸ். நகரை சேர்ந்த டிரைவர் ராஜசேகரன் (வயது 24) ஓட்டி வந்த காரும் கடந்த 16-ந்தேதி மோதிக்கொண்டது. இந்த விபத்தில் மகாமுனியின் மனைவி மாணிக்கவல்லி இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் ராஜசேகரனை கைது செய்தனர்.

இதையடுத்து ராஜசேகரனை ஜாமீனில் விடுதலை செய்வதற்காக காரின் உரிமையாளர் சேலம் மாவட்டம், அன்னதானப்பட்டியை சேர்ந்த அபிஷேக்மாறன் (28), வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வரும் ஈரோடு மாவட்டம், கொடுமுடியை சேர்ந்த செந்தில்குமாரை அணுகினார். இதற்கு அபிஷேக்மாறனிடம், செந்தில்குமார் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

போலீஸ் ஏட்டு கைது

பணம் கொடுக்க விரும்பாத அபிஷேக்மாறன், இதுகுறித்து கரூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசாரின் ஆலோசனையின்படி நேற்று காலை வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு அபிஷேக்மாறன் வந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த போலீஸ் ஏட்டு செந்தில்குமாரிடம் ரசாயனம் தடவிய ரூ.15 ஆயிரத்தை அபிஷேக்மாறன் கொடுத்தார்.

அதனை ஏட்டு செந்தில்குமார் வாங்கினார். அப்போது அங்கு மறைந்து இருந்த கரூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகா தலைமையிலான போலீசார், ஏட்டு செந்தில்குமாரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் லஞ்ச பண விவகாரத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்று ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story