பணி பாதுகாப்பு வழங்கக்கோரி கூடலூர் அரசு கல்லூரி விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
பணி பாதுகாப்பு வழங்கக்கோரி கூடலூர் அரசு கல்லூரி விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடலூர்,
கூடலூர் கோழிப்பாலத்தில் பாரதியார் பல்கலைக்கழகத்தின் கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் அரசு கல்லூரியாக மாற்றப்பட்டது. இதற்கான அரசாணையை தமிழக அரசு கடந்த ஆண்டு வெளியிட்டது. தற்போது அரசு கல்லூரியாக செயல்பட்டு வருகிறது. இங்கு 3 ஆயிரம் மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். 140 விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கூடலூர் அரசு கல்லூரியில் பல ஆண்டுகளாக தொகுப்பூதிய அடிப்படையில் விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு பதிலாக நிரந்தர விரிவுரையாளர்களை அரசு நியமித்து வருகிறது. தமிழக அளவில் 14 அரசு கல்லூரிகளுக்கு நிரந்தர விரிவுரையாளர்களை நியமித்து உயர்கல்வித்துறை செயலாளரிடம் இருந்து நேற்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இதில் கூடலூர் அரசு கல்லூரியில் 6 நிரந்தர விரிவுரையாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதை அறிந்த தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் விரிவுரையாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.
பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கல்லூரியை அரசு கல்லூரியாக மாற்றுவதற்கான அரசாணை வெளியிட்ட போது ஏற்கனவே பணியாற்றி வரும் விரிவுரையாளர்களின் பணி பாதுகாக்கப்படும் என அரசு உறுதி அளித்து இருந்தது. ஆனால் தற்போது நிரந்தர விரிவுரையாளர்களை நியமித்து வருவதால் தங்களின் பணி பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டதாகவும், மேலும் தங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கக்கோரி கூடலூர் கோழிப்பாலம் அரசு கல்லூரி நுழைவு வாயிலில் பெண் விரிவுரையாளர்கள் உள்பட 96 பேர் பகல் 12 மணிக்கு திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 17 ஆண்டுகளாக தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வரும் கல்லூரி விரிவுரையாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கக்கோரி கோஷங்களை எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் விரிவுரையாளர்கள் போராட்டத்தால் கல்லூரி பணியும் வெகுவாக பாதித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விரிவுரையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பலன் ஏற்பட வில்லை. இதனால் கல்லூரி முன்பு போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர். மாலை 3 மணி வரை விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர்.
இதுகுறித்து கல்லூரி விரிவுரையாளர்கள் கூறியதாவது:- கூடலூரில் கல்லூரி தொடங்கிய காலத்தில் இருந்து 17 ஆண்டுகளாக தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகிறோம். கடந்த ஆண்டு சட்டசபையில் 110 விதிகளின் கீழ் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாநில அளவில் 14 கல்லூரிகளை அரசு கல்லூரியாக மாற்றப்படுவதாக அறிவித்தார். மேலும் அக்கல்லூரிகளில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றும் விரிவுரையாளர்களின் பணி பாதுகாப்பும் வழங்கப்படும் என உறுதி அளித்தார். ஆனால் தற்போது சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள 6 நிரந்தர விரிவுரையாளர்களை கூடலூர் அரசு கல்லூரியில் பணியாற்ற நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு விரிவுரையாளருக்கு ரூ.1½ லட்சம் சம்பளம் வழங்கப்படும். இத்தொகையில் 10 தொகுப்பூதிய விரிவுரையாளர்களுக்கு சம்பளம் வழங்கி விடலாம்.
எனவே தமிழக அரசு உறுதி அளித்தவாறு தொகுப்பூதிய விரிவுரையாளர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி மாநில அளவில் தொடர் போராட்டம் நடத்தப்படுகிறது. கூடலூரிலும் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story