சிறையில் அடைக்கப்பட்டவர் குறித்த அதிர்ச்சி தகவல்: சிறுவன்-சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் எச்.ஐ.வி. நோயாளி - மதுரை ஆஸ்பத்திரியில் அனுமதி
சிறுவன்-சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக போக்சோ சட்டத்தில் கைதானவர் எச்.ஐ.வி. நோயாளி என அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. அவர் உடனடியாக மதுரை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் ஒரு சிறுவனையும், 2 சிறுமிகளையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஒரே பகுதியை சேர்ந்த 5 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 5 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறையில் அடைப்பதற்கு முன்பு அந்த 5 பேருக்கும் மருத்துவ பரிசோதனை செய்து மருத்துவ சான்றிதழ்களுடன் சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட ஒருவர் தனக்கும், தனது மனைவிக்கும் எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பதாக சிறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். மேலும் அவருடன் கைதான 2 பேரின் ரத்த மாதிரியையும் பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். போலீசார் 5 பேரையும் சிறையில் அடைப்பதற்கு முன்பு அவசர கதியில் பெயரளவுக்கு மருத்துவ சான்றிதழ் பெற்று சிறையில் அடைத்துள்ளதாக தெரியவருகிறது.
மேலும் இதுகுறித்து விருதுநகர் மாவட்ட மருத்துவ துறையில் விசாரித்தபோது, கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்பட்ட ஆய்வில், தற்போது மதுரை அரசு ஆஸ்பத்திரியில் எச்.ஐ.வி. பாதிப்பால் அனுமதிக்கப்பட்டு இருப்பவருக்கும் அவரது மனைவிக்கும் எச்.ஐ.வி. தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் விதிமுறைப்படி மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத்துறை பணியாளர்கள் அந்த தம்பதியரை முறையாக கண்காணிக் கவில்லை, என்று கூறப்படு கிறது.
இதுபற்றி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் மனோகரனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள குறிப்பிட்ட அந்த நபருக்கும் அவரது மனைவிக்கும் ஏற்கனவே எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு மதுரையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அவருக்கு மதுரையில் தொடர் சிகிச்சை அளிப்பதற்கும் கவுன்சிலிங் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் அவரால் பாலியல் ரீதியாக பாதிப்படைந்த சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு நோய் பாதிப்பு ஏதும் இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில் அந்த நபருக்கும், அவருடைய மனைவிக்கும் எச்.ஐ.வி. பாதிப்பு எப்படி வந்தது? அவர் வேறு யாருடனும் பாலியல் ரீதியாக தொடர்பு வைத்திருந்தாரா? என்பது தொடர்பாக போலீசாரும், மருத்துவ துறை அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story