அனைத்து தரப்பு மக்களுக்கும் உணவு அளிக்கும் விவசாயிகளை, ஸ்டாலின் கொச்சைப்படுத்த வேண்டாம் எடப்பாடி பழனிசாமி பேச்சு


அனைத்து தரப்பு மக்களுக்கும் உணவு அளிக்கும் விவசாயிகளை, ஸ்டாலின் கொச்சைப்படுத்த வேண்டாம் எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 26 Feb 2020 11:30 PM GMT (Updated: 26 Feb 2020 6:28 PM GMT)

அனைத்து தரப்பு மக்களுக்கும் உணவு அளிக்கும் விவசாயிகளை, ஸ்டாலின் கொச்சைப்படுத்த வேண்டாம் என வைத்திலிங்கம் எம்.பி. இல்ல திருமண விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தஞ்சாவூர்,

அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளருமான ஆர்.வைத்திலிங்கம் எம்.பி.-தங்கம் ஆகியோரின் மகன் டாக்டர் ஆனந்தபிரபுக்கும், கீழவன்னிப்பட்டு தவமணி-சுமதி ஆகியோரின் மகள் டாக்டர் ஞானரூபிணிக்கும் தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மகாராஜா மகாலில் நேற்று திருமணம் நடந்தது.

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி. வரவேற்று பேசினார்.

அவர் பேசும்போது, இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் அ.தி.மு.க.வும், ஆட்சியும் நீடிக்கும் என மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சொன்னார். அந்த எண்ணம் நிறைவேறும் வகையில் கழகம் தான் குடும்பம், குடும்பம் தான் கழகம் என வந்துள்ள அனைவரையும் வரவேற்கிறேன் என்றார்.

எடப்பாடி பழனிசாமி பேச்சு

மணமக்களை வாழ்த்தி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

தஞ்சை மாவட்டம் தலைசிறந்த மாவட்டமாக விளங்குவதற்கு தூணாக விளங்கியவர் வைத்திலிங்கம். அவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் தஞ்சை மாநகராட்சி ஆனது. விவசாயிகளின் பிள்ளைகள் உயர்கல்வி படிக்க வேண்டும் என்பதற்காக கல்வி செல்வத்தை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்பதற்காக கால்நடை மருத்துவக்கல்லூரி, வேளாண்மை கல்லூரி, பொறியியல் கல்லூரியை இந்த மாவட்டத்திற்கு கொண்டு வந்தவர்.

இரவு, பகல் பாராமல் இந்த மண்ணில் ரத்தத்தை வியர்வையாக சிந்தி உழைக்கக்கூடிய விவசாயிகளின் பிள்ளைகள் உயர்கல்வி படிக்க தூணாக நின்றவர் வைத்திலிங்கம். ஜெயலலிதாவின் ஆசியோடு இந்த திருமணம் இனிதே நிறைவேறி இருக்கிறது. மணமக்களுக்கு இன்றைக்கு பொன்னான நாள். ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான். வாழ்கின்ற காலத்தில் இனிமையான நாள் என்றால் அது திருமண நாள் தான். அந்த திருமண நாளை மணமக்கள் பெற்று இருக்கின்றனர்.

விளம்பரப்படுத்துகிறார்

வாழ்வில் ஏற்றம் வந்தால் மகிழ்ச்சியாக இருக்கிறோம். துயரம் வரும்போது துவண்டு விடக்கூடாது. மணமக்கள் இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அனுசரித்து போகும்போது தான் குடும்பம் சிறக்கும். ஒரு விவசாயி தமிழகத்தின் முதல்-அமைச்சராக இருக்கும் சூழ்நிலையில், விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்து உச்சநிலையை அடைந்துள்ள வைத்திலிங்கத்தின் மகன் திருமணவிழாவில் முன்னிலை வகிக்கும் பாக்கியத்தை இறைவன் எனக்கு கொடுத்தமைக்கு மகிழ்கின்றேன்.

ஒவ்வொருவருக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும். அப்படி எனக்கு ஒரு சந்தர்ப்பம். உங்களால் எனக்கு முதல்-அமைச்சர் என்ற பதவி கிடைத்து இருக்கிறது. எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எப்போதும், எந்நாளும் எங்களது எண்ணம் தான் வந்து கொண்டு இருக்கிறது. நாள்தோறும் பத்திரிகையில் நாம் விளம்பரம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அவரே நம்மை விளம்பரப்படுத்திக்கொண்டு இருக்கிறார்.

சொந்தக்காலில்...

நம்மை பற்றி அவர், பேசாத நாள் கிடையாது. அதுவும் விவசாயி என்றால் என்ன எரிச்சல் என்றே தெரியவில்லை. நான் விவசாயி என்று சொன்னால், நீ விவசாயி இல்லை என் கிறார். அதற்கு நான் என்ன செய்ய முடியும். நான் பிறந்து வளர்ந்தது கிராமத்தில். எனது குடும்பம் விவசாய குடும்பம். அப்படி என்றால் விவசாயி என்று தானே சொல்ல முடியும். வேறு என்ன என்று சொல்ல முடியும். இங்கே வந்து இருக்கிற அத்தனை பேரும் விவசாயிகள். உங்கள் முகத்தில் மகிழ்ச்சியை பார்க்கின்றோம்.

விவசாயி என்று சொன்னாலே தனி பெருமை. அடுத்தவரிடம் கையேந்தி பிழைக்கின்ற கூட்டம் விவசாய கூட்டம் இல்லை என்பதை தனது உழைப்பால் நிரூபிக்கின்ற ஒரே மனிதர்் விவசாயி தான். மற்றவர்கள் எல்லாம் பிறரை நம்பி வாழக்கூடியவர்கள். விவசாயி தான் தனது சொந்தக்காலில் நிற்கிறார்். அப்படி சொந்தக்காலில் நின்று வாழ்கின்றவரை நீ எதிர்த்து போராடி வெல்ல முடி யாது.

பச்சை துண்டு

விவசாயி உழைப்பதற்காக பிறந்தவர். அனைத்து தரப்பு மக்களுக்கும் உணவு அளிக்க பிறந்தவர். இரவு, பகல் பாராமல் வெயிலையும், மழையையும் பொருட்படுத்தாமல் உழைக்கின்ற விவசாயியை தயவு செய்து கொச்சைப்படுத்த வேண்டாம். பச்சை துண்டு போட்டவர் எல்லாம் விவசாயி ஆக முடியாது என்று ஸ்டாலின் சொல்கிறார்.

பச்சை துண்டு போடுவதற்கே ஒரு தகுதி வேண்டும். அந்த தகுதி விவசாயிகளுக்கு இருக்கிறது. மணமக்கள் இருவரும் மருத்துவர். மக்களுக்கு சேவை செய்வதற்காக இறைவன் படைத்து இருக்கிறான் என நினைக்கிறேன். எவ்வளவோ பதவிக்கு வரலாம். ஆனால் மருத்துவர் என்பது சாதாரண வி‌‌ஷயம் இல்லை. ஒரு உயிரை காக்கக்கூடியது மருத்துவத்துறை தான்.

அந்த மருத்துவத்துறையில் இருவரும் பட்டம் பெற்று மருத்துவர்களாக இருந்து மக்கள் சேவை செய்து கொண்டு இருக்கிறார்கள். மற்றவர்களை வாழ வைக்கக்கூடிய பணியில் அவர்கள் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பணி சிறக்க, இறைவனை வேண்டி எல்லா வளமும் பெற்று மணமக்கள் வாழ வாழ்த்துகிறேன்..

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் துணை ஒருங்கிணைப்பாளர்கள் முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், அமைச்சர்கள் தங்கமணி, ஆர்.பி.உதயகுமார், செங்கோட்டையன், காமராஜ், ஓ.எஸ்.மணியன், திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திரபாலாஜி, செல்லூர் ராஜூ, சி.விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சரோஜா, வளர்மதி, ராஜலட்சுமி, எம்.பி.க்கள் நவநீதகிரு‌‌ஷ்ணன், ரவீந்திரநாத்குமார், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன், பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மற்றும் அமைச்சர்கள், அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முடிவில் அமைச்சர் துரைக்கண்ணு நன்றி கூறினார்.

Next Story